புது தில்லி: உத்தர பிரதேசம், லக்கீம்பூர் கெரி வன்முறை சம்பவத்துக்கு தொடர்புடைய மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை பேரணி நடத்தின.
அஜய் மிஸ்ராவை சிறைக்கு அனுப்பும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையில் இருந்து தொடங்கி இந்த பேரணி வெளியே உள்ள விஜய் சௌக்கில் முடிவடைந்தது. இதில் காங்கிரஸ், திமுக, சிவசேனை உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதில் அனைத்து எதிர்க்கட்சியினரும் ஒன்றிணைந்துள்ளனர்.
லக்கீம்பூர் கெரி சம்பவம் திட்டமிட்ட சதி என்று சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜய் மிஸ்ராவை சிறைக்கு அனுப்பும் வரை எங்கள் போராட்டம் ஓயாது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்பதாக பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் விவசாயிகள் மீது வாகனம் ஏற்றிய வழக்கில் தொடர்புடைய மத்திய இணையமைச்சரை தனது அமைச்சரவையில் பிரதமர் வைத்துள்ளார். இது விவசாயிகளுக்கு எதிரானது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்' என்றார்.
"எத்தனை எம்.பி.க்களை அவையிலிருந்து இடைநீக்கம் செய்தாலும், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவோம்' என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர்.
இந்தப் பேரணிக்கு முன்பு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் நாடாளுமன்ற அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பாஜக தொண்டர்கள், பத்திரிகையாளர் உள்
பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வருவதால் அமளி ஏற்பட்டுள்ளது. லக்கீம்பூர் கெரி வன்முறையை விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களபையில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, தீபேந்திர சிங் ஹூடா ஆகியோர் ஒத்தி வைப்பு நோட்டீஸ் அளித்துள்ளனர்.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்குர் ஒத்தி வைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.