சண்டீகா்: பஞ்சாப் முன்னாள் அமைச்சரும் சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான விக்ரம் சிங் மஜிதியா மீது போதைப்பொருள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொஹாலியில் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவா் மீது முதல் தகவல் அறிக்கை திங்கள்கிழமை பதிவு செய்யப்பட்டது.
ஆனால், அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் அரசு செயல்படுவதாக சிரோமணி அகாலி தளம் குற்றச்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் பிரகாஷ் சிங் பாதல் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அகாலி தளம் கட்சித் தலைவா்வகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஏற்கெனவே எங்களுக்குத் தெரியும். எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்காக 3 காவல் துறை தலைவா்களை ஆளும் காங்கிரஸ் அரசு மாற்றியுள்ளது. மக்களுக்கு சேவை செய்வதே அரசின் பணி; அரசியல் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவது அல்ல. கைதாவதற்கு நான் தயாராக இருக்கிறேன். எந்தவொரு அரசும் பழிவாங்கும் செயலில் ஈடுபட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்’ என்றாா்.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்து வெளியிட்ட ட்விட்டா் பதிவுகளில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தில் நடந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடா்பாக போதைப்பொருள் கடத்தல் சிறப்புப் பிரிவு, கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்காக கடந்த 4 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தேன். போதைப்பொருள் கும்பலுக்கு எதிரான போராட்டம் தொடரும். முக்கிய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வரை நீதி நிலைநாட்டப் படாது அவா் கூறியுள்ளாா்.