கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மாநகராட்சித் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறுகையில், ""கொல்கத்தா மாநகராட்சியில் மொத்தம் 144 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 132 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 3 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றியடைந்தனர்.
மொத்த வாக்குப்பதிவில் 71.95 சதவீத வாக்குகள் திரிணமூல் காங்கிரஸýக்கு பதிவானது. இடதுசாரிகளுக்கு 11.13 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 8.94 சதவீத வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் 4.47 சதவீத வாக்குகளைப் பெற்றது'' என்று தெரிவித்தார்.
மம்தா சகோதரரின் மனைவி வெற்றி: திரிணமூல் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர்களான முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், துணை மேயர் அதின் கோஷ் உள்ளிட்டோர் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். கொல்கத்தா மாநகராட்சியின் 73}ஆவது வார்டில் போட்டியிட்ட மம்தா பானர்ஜியின் சகோதரரின் மனைவி காஜரி பானர்ஜியும் வெற்றி பெற்றார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ""தேர்தலில் பெற்ற வெற்றியை மாநில மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். திரிணமூல் காங்கிரஸýக்கு எதிராகப் போட்டியிட்ட பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இது மண்ணின் மகளுக்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றி வரும் நாள்களில் தேசிய அரசியலின் பாதையைக் காண்பிக்கும்'' என்று தெரிவித்தார்.
பாஜகவை பின்னுக்குத் தள்ளிய இடதுசாரிகள்: இந்தத் தேர்தலில் வாக்கு விகிதாசார அடிப்படையில் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவை இடதுசாரிகள் பின்னுக்குத் தள்ளினர்.
தேர்தலில் வாக்கு விகிதாசார அடிப்படையில் இடதுசாரிகள் இரண்டாம் இடம் பிடித்தது எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடிக்கும் திரிணமூல் காங்கிரஸின் உத்திகளில் ஒன்றாகும் என்று பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ""மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைச் சிதறடித்தால்தான் தேர்தலில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று திரிணமூல் காங்கிரஸ் கருதுகிறது. எனினும் மாநிலத்தில் பாஜகவைவிட இடதுசாரிகள் வலுவான சக்தியாக உருவெடுக்க வாய்ப்பில்லை. இங்கு பாஜகதான் பிரதான எதிர்க்கட்சி. மேலும் 111 உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்தத் தேர்தல் திரிணமூல் காங்கிரஸின் பிரதான எதிர்க்கட்சி யார் என்பதை பாஜக நிரூபிக்கும்'' என்று தெரிவித்தார்.