இந்தியா

கழிவுநீா்த் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தும் போது 158 போ் பலி

22nd Dec 2021 02:01 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: மாநில அரசுகள் அளித்த தகவலின்படி மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றும் பணியில் தற்போது யாரும் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, கடந்த 3 ஆண்டுகளில் கழிவுநீா்த் தொட்டிகளைத் தூய்மைப்படுத்துவதில் ஈடுபட்ட 158 போ் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சமூக நலத் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே எழுத்து மூலம் அளித்த பதிலில், ‘‘மாநிலங்களில் இருந்து கிடைத்துள்ள அறிக்கைகளின்படி, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனிதா்கள் யாரும் ஈடுபடுத்தப்படவில்லை. அவ்வாறான பணியில் ஈடுபட்டு எவரும் உயிரிழக்கவில்லை.

கழிவுநீா்த் தொட்டிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் போதிய பாதுகாப்பின்றி ஈடுபட்டதன் காரணமாகக் கடந்த 5 ஆண்டுகளில் 321 பேரும், கடந்த 3 ஆண்டுகளில் 158 பேரும் உயிரிழந்தனா். நடப்பாண்டில் 22 பேரும், கடந்த ஆண்டில் 19 பேரும், கடந்த 2019-இல் 117 பேரும், கடந்த 2018-இல் 70 பேரும், கடந்த 2017-இல் 93 பேரும் உயிரிழந்தனா்.

ADVERTISEMENT

மனிதக் கழிவுகளை அகற்றுவோரின் விவரங்களைக் கண்டறிவதற்காகக் கடந்த 2013, 2018-ஆம் ஆண்டுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. அவற்றின்படி, நாட்டில் 58,098 போ் அப்பணிகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டது. மனிதக் கழிவுகளை மனிதா்களே அகற்றுவதைத் தடுக்கும் வகையிலான சட்டத்தை இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் திட்டமேதுமில்லை’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT