பெங்களூரு: கர்நாடக காவல் துறையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கும் வாய்ப்பு அளிக்க உத்தரவிடக் கோரி, 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் "சங்கமா' தன்னார்வத் தொண்டு நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.
மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், அரசு வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளிக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் முதல்முறையாக கர்நாடக காவல் துறையில் பணிபுரிய திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கர்நாடக காவல் துறை வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநில காவல் ஆள்சேர்ப்பு ,2021-க்கான அறிவிக்கையில், சிறப்பு அதிரடிப் படையில் காவல் துணை ஆய்வாளராகப் பணியாற்றுவதற்கு ஆண், பெண், திருநங்கைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கேட்கப்பட்டுள்ளன.
70 பணியிடங்களுக்கான இந்த ஆள் சேர்ப்பில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் தத்தமது பாலினத்தை உறுதி செய்ய மாவட்ட மாஜிஸ்திரேட் அளிக்கும் சான்றிதழுடன் விண்ணப்பங்களை செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை 2022-ஆம் ஆண்டு ஜன.18-ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவிடலாம்.
அதேபோல, தடய அறிவியல் துறையில் காட்சி குற்றவியல் அதிகாரி பணியிடங்களுக்கும் திருநங்கைகள் உள்ளிட்டோரிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை ஜன. 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவிடலாம்.
திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறித்து சங்கமா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிஷா குல்லூர் கூறியதாவது:
திருநங்கைகளுக்கு அரசுப் பணி வாய்ப்பு அளிக்கக் கோரி நாங்கள் நீதிமன்றத்தை அணுகியிருந்தோம். 2020-இல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், எங்கள் கோரிக்கையை ஏற்று தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதன்பேரில், காவல் பணியில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவிருக்கிறது. கர்நாடக அரசின் இம்முடிவை வரவேற்கிறோம். கர்நாடகத்தில் ஒரு லட்சம் திருநங்கைகள் இருக்கிறார்கள். இதில் 13 ஆயிரம் பேர் எங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். அடுத்தகட்டமாக பணியிடத்தில் திருநங்கைகள் சுமுகமாகப் பணியாற்ற தேவையான சூழலை உருவாக்கும் பெரும் சவால் காத்திருக்கிறது என்றார்.