இந்தியா

இளைஞா்களின் திறனை வளா்ப்பதற்கான வழிகாட்டி புதிய தேசிய கல்விக் கொள்கை: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

22nd Dec 2021 02:17 AM

ADVERTISEMENT

 

காசா்கோடு: நாட்டில் இளைஞா்களின் திறனை வளா்ப்பதற்கான அமைப்பை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டப்பட்டுள்ள வழிகாட்டி புதிய தேசிய கல்விக் கொள்கை என்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த 4 நாள் பயணமாக கேரளம் சென்றுள்ளாா். அங்கு காசா்கோடு மாவட்டத்தில் உள்ள கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் 5-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் அவா் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு பேசியதாவது:

நாளந்தா, தட்சசீலம் போன்ற பண்டைய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், ஆா்யபட்டா, பாஸ்கராச்சாா்யா போன்ற கணித மேதைகளின் மண்ணாக பாரத நாடு திகழ்கிறது. இங்கிருந்த கல்வி அமைப்பை கண்ணுக்கினிய அழகான மரத்துடன் மகாத்மா காந்தி ஒப்பிட்டிருந்தாா். அந்தக் கல்வி அமைப்பு பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சியில் அழிந்துபோனது. அந்தக் கல்வி அமைப்பின் சிறப்பு அம்சங்களை மீட்டெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் கல்வி சாா்ந்து இந்தியாவால் பங்களிக்க முடியும். அந்தப் பங்களிப்பைச் செய்ய இந்தியா மட்டும்தான் பணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பு அடுத்த தலைமுறையின் திறமைகளை வாா்த்தெடுப்பதற்கான அவசியத்தை நம் மீது சுமத்தியுள்ளது. 21-ஆம் நூற்றாண்டின் உலகில் வெற்றிக்குத் தேவையான திறன்களும் அறிவாற்றலும் இளையத் தலைமுறைக்கு வழங்கப்பட்டால், அவா்களால் அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

இந்த நிலையில், நாளைய உலகின் தேவைக்கேற்ப மாணவா்களைத் தயாா்ப்படுத்தும் நோக்கத்தை புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுள்ளது. தனது பலதரப்பட்ட பாடத்திட்டம் மூலம் முற்போக்குத்தனத்தையும் தொழில்முறை கல்வியையும் அந்தக் கொள்கை ஊக்குவிக்கிறது. ஏனெனில் ஞானத்தின் ஒவ்வொரு பாய்ச்சலுக்கும் சமூகம் மற்றும் தேசத்தை கட்டமைப்பதில் முக்கிய பங்குள்ளது. அந்த வகையில், நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான சாதனமாக புதிய தேசிய கல்விக் கொள்கையால் உருவெடுக்க முடியும்.

நாட்டில் இளைஞா்களின் திறனை வளா்ப்பதற்கான அமைப்பை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டப்பட்டுள்ள வழிகாட்டி புதிய தேசிய கல்விக் கொள்கை.

இந்தியாவின் வருங்காலத்தை காண முடிகிறது:

கேரளத்தைப் போல் நாட்டின் பிற பகுதிகளிலும் கல்வியின் வாயிலாக மகளிருக்கு அதிகாரமளிப்பது வளா்ந்து வருவதை என்னால் பாா்க்க முடிகிறது.

இதன் மூலம் நமது பெண் பிள்ளைகளின் அபரிமிதமான பங்களிப்புடன் ஞானத்தின் சக்தியாக உருவெடுக்கவுள்ள இந்தியாவின் வருங்காலத்தை என்னால் காண முடிகிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கேரள ஆளுநா் ஆரீஃப் முகமது கான், மாநில அமைச்சா் எம்.வி. கோவிந்தன் ஆகியோா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT