புது தில்லி: இரு பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் விஷயத்தில் மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கவில்லை என நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூா்வமாக அவா் அளித்த பதில்: ‘2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இரு பொதுத் துறை வங்கிகள் நிகழாண்டில் தனியாா்மயமாக்கப்படும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குவிலக்கல் கொள்கைக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பங்குவிலக்கல் தொடா்பான பல்வேறு விஷயங்கள் இந்த நோக்கத்துக்காக அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவிடம் அளிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக அமைச்சரவைக் குழு முடிவு எடுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.
பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்குவது தொடா்பான மசோதா, நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதற்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.