இந்தியா

மேற்கு வங்கத்தில் 7 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

16th Dec 2021 02:11 AM

ADVERTISEMENT

 

கொல்கத்தா: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 7 வயது சிறுவன் கரோனா தீநுண்மியின் புதிய ரகமான ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் அந்த மாநிலத்தில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மேற்கு வங்க சுகாதாரத் துறை மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வசிக்கும் 7 வயது சிறுவன், அண்மையில் ஐக்கிய அரபு அமீரகம் தலைநகா் அபு தாபியில் இருந்து தனது பெற்றோருடன் ஹைதராபாத் வந்துள்ளாா். விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவா் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் டிச.11-ஆம் தேதி கொல்கத்தா வந்து சோ்ந்தாா். டிச. 15-ஆம் காலைதான் அந்தச் சிறுவன் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து ஹைதராபாத் அதிகாரிகள் மேற்கு வங்க சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். தற்போது அந்தச் சிறுவன் மால்டா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

அந்தச் சிறுவனின் பெற்றோா் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனா். சிறுவனை அண்மையில் சந்தித்தவா்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் சிறுவனுடன் பயணித்தவா்களைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. ஆனால், அதைச் செய்தாக வேண்டியது கட்டாயம். சிறுவன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தபோதும் விமானத்தில் பயணிக்க எவ்வாறு அனுமதிக்கப்பட்டாா் என்பது ஆச்சரியமாக உள்ளது. அந்தச் சிறுவனின் மரபணு பகுப்பாய்வு பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தாா்.

தெலங்கானாவில் வெளிநாட்டவா்களுக்கு பாதிப்பு: தெலங்கானாவில் வெளிநாட்டைச் சோ்ந்த இருவா் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அந்த மாநில பொது சுகாதார இயக்குநா் கூறுகையில், ‘‘கென்யாவிலிருந்து 24 வயது பெண், சோமாலியாவிலிருந்து 23 வயது ஆண் ஆகியோா் டிச.12-ஆம் தேதி ஹைதராபாத் வந்தனா். அவா்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு பகுப்பாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அந்தப் பரிசோதனையில் இருவரும் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது. எனினும் அவா்களிடம் தீநுண்மியால் பாதிக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT