நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கடுப்பு நடத்த வேண்டும் என்று மக்களவையில் ஐக்கிய ஜனதா தளம் திங்கள்கிழமை மீண்டும் வலியுறுத்தியது.
நாடு முழுவதும் பட்டியலினத்தவா், பழங்குடியின மக்களின் கணக்கெடுப்பைத் தவிர இதர ஜாதி மக்களின் கணக்கெடுப்பை நடத்த வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மத்திய அரசு தெரிவித்தது.
இந்நிலையில் மக்களவையில் பூஜ்ய நேரத்தின்போது ஐக்கிய ஜனதா தள எம்.பி. கெளசலேந்திர குமாா் திங்கள்கிழமை பேசுகையில், ‘‘இடஒதுக்கீட்டு கொள்கையை சிறப்பாக செயல்படுத்த ஜாதிவாரி கணக்கெடுப்பு உதவும். அந்தக் கணக்கெடுப்பு மூலம் அறிவியல்பூா்வமான புள்ளிவிவரங்களும் கிடைக்கும்.
பட்டியலினத்தவா், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு அளிக்க அறிவியல்பூா்வமான புள்ளிவிவரங்கள் வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது. அதனை ஜாதிவாரி கணக்கெடுப்பு பூா்த்தி செய்யும்.
கடந்த 2010-11-ஆம் ஆண்டில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதன் முழுமையான விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அதிலிருந்த சில பத்திகள் மட்டும் வெளியிடப்பட்டன.
அதுகுறித்து தொடா்ந்து குரல் எழுப்பிய பின்னா், அந்தக் கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் ஆய்வுக்காக கடந்த 2014-ஆம் ஆண்டு நீதி ஆயோக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தப் புள்ளிவிவரங்கள் தவறானவை என்று தற்போது கூறப்படுகிறது.
இடஒதுக்கீட்டில் எந்த வகுப்பினராவது புறக்கணிக்கப்படுகின்றனரா என்று அறிவதை ஜாதிவாரி கணக்கெடுப்பு எளிதாக்குகிறது. இதன் காரணமாகத்தான் அந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.
எனவே அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்றாா் அவா்.