இந்தியா

முப்படை தலைமைத் தளபதி பயணித்தது மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்: ரஷிய நிறுவனம் விளக்கம்

9th Dec 2021 04:45 AM

ADVERTISEMENT

 

சென்னை / புது தில்லி: விபத்துக்குள்ளான முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் பயணித்த எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் நவீன வசதிகளுடன் கூடிய, மிகவும் மேம்பட்ட ஹெலிகாப்டர் என்றும், இந்திய விமானப் படையில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் கஸன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டரில் காலநிலையை துல்லியமாக கண்காணிக்கக் கூடிய ரேடாரும், இரவுநேரத்தில் தெளிவாக காட்டும் திறனைக் கொண்ட சமீபத்திய தலைமுறையைச் சார்ந்த உபகரணங்களும் பொருத்தப்பட்டுள்ளன. 

இந்த ஹெலிகாப்டர் அதிகபட்சமாக 13,000 கிலோ எடையை சுமந்துசெல்லும் திறன்வாய்ந்தது.

ADVERTISEMENT

பேரிடர் மீட்பு நடவடிக்கைகள், போக்குவரத்து பயன்பாட்டுக்காக ஹெலிகாப்டர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில், 80 எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்களை விமானப் படையில் இணைக்கும் நோக்கில் கடந்த 2008-இல் ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொண்டது. 

பின்னர் அதிக திறன்வாய்ந்த 151 எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்களுக்கும் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது. முதல்கட்டமாக இந்த ஹெலிகாப்டர்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா வந்தடைந்தன.

இந்த நிலையில், மலைப்பாங்கான பகுதிகளுக்கு கூடுதல் ராணுவ வீரர்களையும், சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் வகையில், விமானப் படையின் இயக்கத் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்களை இந்தியா அதிகாரபூர்வமாக ரஷியாவிடம் பெற்றது. 

ஏவுகணையின் தாக்குதலிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான தற்காப்பு அமைப்புகள், அதிக பாதுகாப்புக் கவசங்களைக் கொண்ட விமானி அறை (காக்பிட்) உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இந்த ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்டுள்ளன. 

இத்தகைய பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டர், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கி, முப்படை தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உயிரிழப்புக்கு காரணமாகியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள் குறித்து ரஷிய அரசின் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி நிறுவனமான ரொúஸாபொரோன் எக்ஸ்போர்ட் விடுத்துள்ள அறிக்கையில், ""ராணுவ வீரர்களையும், சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் வகையில், எம்ஐ17வி5 ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது. இதன் சரக்குகள் வைப்பு அறையில் பொருத்தப்பட்டுள்ள சாதனங்கள் வான்வழியாக அல்லது தரையிலிருந்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை உளவுபார்த்து முறியடிக்கவல்லது. 

இந்த ஹெலிகாப்டர் ஒருமணிநேரத்தில் 250 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன்வாய்ந்தது. இதில் மேம்படுத்தப்பட்ட  டிவிஎஸ்- 117விஎம் என்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. எம்ஐ-8/17 பிரிவில் இந்த ஹெலிகாப்டர் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்டது எனத் தெரிவித்துள்ளது.


எம்ஐ-17வி5 ஹெ−காப்டர் சிறப்பு அம்சங்கள்

  • காலநிலையை துல்லியமாக கண்காணிக்கும் ரேடார்
  • இரவுநேரத்தில் தெளிவாக காட்டும் உபகரணங்கள்
  • 13,000 கிலோ எடையை சுமக்கும் திறன்
  • ஏவுகணையின் தாக்குதலிலிருந்து தற்காப்பு வசதி
  • 250 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன்வாய்ந்தது
  • அதிக பாதுகாப்புடன் கூடிய விமானி அறை
     
ADVERTISEMENT
ADVERTISEMENT