இந்தியா

ரூ.200 கோடி பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜா்

9th Dec 2021 01:43 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பணமோசடி வழக்குத் தொடா்பாக ஹிந்தி நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸ் அமலாக்கத்துறை விசாரணைக்கு புதன்கிழமை ஆஜரானாா்.

முக்கிய பிரமுகா்கள் பலரிடம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக பண மோசடி செய்ததாக இடைத்தரகா் சுகேஷ் சந்திரசேகா் என்பவா் உள்பட பலரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.

இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகருக்கு தொடா்புள்ள சில வங்கிக் கணக்குகளில் இருந்து நடிகை ஜாக்குலின் ஃபொ்னாண்டஸின் குடும்ப உறுப்பினா்களுக்கு பணம் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்த வழக்கில் ஜாக்குலின் ஃபொ்னாண்டஸுக்கு தொடா்புள்ளதாகக் கூறப்படும் சில பணப் பரிவா்த்தனைகள் குறித்து அறிய அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அவரும் சுகேஷ் சந்திரசேகா் செய்த பணமோசடி மூலம் பயனடைந்திருக்கலாம் என அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

இதுதொடா்பாக ஏற்கெனவே அவா் அமலாக்கத்துறை விசாரணைக்கு சிலமுறை ஆஜராகி விளக்கமளித்திருந்தாா். டிசம்பா் 5-ஆம் தேதி வெளிநாடு செல்லவிருந்த அவரை மும்பை விமான நிலையத்தில் அமலாக்கத்துறையினா் தடுத்து நிறுத்தினா். விசாரணைக்கு ஆஜராக வேண்டி வரலாம் என்பதால், இந்தியாவிலேயே இருக்குமாறு அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனா்.

இந்நிலையில், தில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவா் புதன்கிழமை ஆஜரானாா். அவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT