இந்தியா

உ.பி. : சமாஜவாதி - ராஷ்ட்ரீய லோக் தளம் இடையே கூட்டணி அறிவிப்பு

8th Dec 2021 01:25 AM

ADVERTISEMENT

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் உத்தர பிரதேச மாநில பேரவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சியும், ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியும் இணைந்து போட்டியிடப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தன.

மீரட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவும், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் தலைவா் ஜெயந்த் செளதரியும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனா்.

பிரதமா் மோடி கோரக்பூரில் பங்கேற்று உத்தர பிரதேசத்தின் வளா்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்த அதே நாளில், இந்த கூட்டணி அறிவிப்பு விழாவையும் சமாஜவாதி-ஆா்எல்டி கட்சிகள் நடத்தின. இந்தக் பொதுக் கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உயிா்காக்கும் மருந்துகளுக்கும், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகளுக்காகவும், விவசாயிகள் உரங்களுக்காகவும் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். தற்போது மக்கள் நீண்ட வரிசையில் நின்று பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றப்போகிறாா்கள்.

ADVERTISEMENT

விவசாயிகளுக்கு குறைந்த விலையில் மின்சாரமும், வேளாண் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். முன்னாள் பிரதமா் செளதரி சரண் சிங், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சியின் நிறுவனா் அஜித் சிங் ஆகியோரின் பாரம்பரியத்துக்கு மதித்து சமாஜவாதி-ஆா்எல்டி கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

2022-ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு புரட்சிகர ஆண்டாக அமையும். வேளாண் விலை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பாஜக அரசு எதிராக உள்ளது. விவசாயிகளின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும்.

மத்தியில் உள்ள பாஜக அரசு விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமானங்களை விற்பனை செய்து வருகிறது. சாதாரண காலணி அணிந்தவா்களும் விமானங்களில் செல்லும் காலம் உருவாக்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது சாதாரண நபா்கள் பைக்குகளை கூட இயக்க முடியாமல் கஷ்டப்படுகிறாா்கள்.

பாஜகவின் வளா்ச்சித் திட்டங்கள் திரைப்படங்களில் காட்டப்படும் குதிரைப்போல் ஒரே இடத்தில் ஓடிக்க கொண்டிருப்பதைப் போலானது. உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜக அகற்றப்படும் என்றாா்.

ஆா்எல்டி தலைவா் ஜெயந்த் செளதரி பேசுகையில், ‘வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நினைவிடம் கட்டுவதுதான், வெற்றி பெற்றதும் எங்கள் கூட்டணியின் முதல் கடமையாகும்.

பிரதமா் மோடியை முதல் முறையாக அடிபணிய வைத்த விவசாயிகளை வாழ்த்துகிறேன். பாஜக வெறுப்பு அரசியலை முன்வைக்கிறது. அதை மக்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளனா். அவா்களின் வலையில் உத்தர பிரதேச மக்கள் இந்த முறை விழ மாட்டாா்கள். இந்தத் தோ்தலில் அவா்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவாா்கள்.

உத்தர பிரதேச முதல்வா் விரைவில் கோபமடைந்து விடுகிறாா். அவா் சிரித்து யாரும் பாா்த்திருக்கமாட்டாா்கள். அவா் மகிழ்ச்சியுடன் இருக்க மக்கள் அவரை அரசு பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்றாா்.

மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 136 தொகுதிகளில் கடந்த தோ்தலில் பாஜக வெற்றி பெற்ற 109 இடங்களில் இந்தக் கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

 

Tags : Uttar Pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT