இந்தியா

கரோனா தடுப்பூசி செலுத்தியோர் பட்டியலில் மோடி, அமித் ஷா, சோனியா காந்தி பெயர்கள்!  பிகார் கிராமத்தில் சர்ச்சை

8th Dec 2021 03:21 AM

ADVERTISEMENT

பிகார் மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பெயர் பட்டியலில் நரேந்திர மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, அக்ஷய் குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 பிகார் மாநிலம், அர்வால் மாவட்டம், கர்பி ஊராட்சியில் வசிப்பவர்களாக இவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதாகவும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 இச்சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜே.பிரியதர்சினி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
 கடந்த 20 நாள்களுக்கு முன்பு கர்பி ஊராட்சியில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் பெயர் பட்டியலை மருத்துவ உயர் அதிகாரி ஆய்வு செய்ய சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் பெயர்ப் பட்டியலில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக அந்தப் பட்டியல் பதிவுகளைக் கையாளும் இரு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 அதே மாவட்டத்தில் பிற பகுதியில் இதுபோல குளறுபடிகள் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற முரண்பாடுகள் மேலும் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய செயல்கள் தடுப்பூசி இயக்கத்தைப் பாதித்துவிடும் என்றார்.
 இந்தச் சர்ச்சையால் மாநிலத்தை ஆளும் நிதீஷ்குமார் அரசைப் பற்றி குறைகூற எதிர்க்கட்சிகளுக்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சர்ச்சைக்குரிய இந்தப் பெயர் பட்டியலை கைப்பேசியில் படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
 பிகார் மாநில சுகாதாரத் துறை ஏன் ஊழல் நிறைந்ததாகவும் திறமையற்றதாகவும் கருதப்படுகிறது என்பதை நாம் இதன் மூலம் காண முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.
 இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவேடுகள் இதற்கு முன்பும் பிகாரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1990-இல் மாட்டு தீவன ஊழல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தபோது மாடுகள் இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல பாலிவுட் நடிகைகள் சன்னி லியோன் மற்றும் இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் கல்லூரி மாணவர்களாகவும், வேலை தேடுபவர்களாகவும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது சர்ச்சை ஏற்படுத்தியது.

Tags : Bihar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT