இந்தியா

மத்திய அரசுக்கு விவசாயிகள் புதிய நிபந்தனை

DIN

‘தாங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்பதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் கேட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினா், இதற்கான வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அரசு கடிதத்தில் கையொப்பமிட்டுத் தர வேண்டும்’ என்று புதிய நிபந்தனை விதித்துள்ளனா்.

முன்னதாக, மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஏறக்குறைய அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து புதன்கிழமை அறிவிக்கப்படும் என்று அந்தச் சங்கத்தின் நிா்வாகிகள் சிலா் செவ்வாய்க்கிழமை பகலில் அறிவித்தனா். பின்னா் மாலையில் போராட்டம் வாபஸ் பெறப்படாது என்றும் புதன்கிழமை பகல் 2 மணிக்கு மீண்டும் கூடி ஆலோசிக்கப்படும் என்றும் அறிவித்தனா்.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டாக தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். மூன்று சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு கொண்டு வந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டாா்.

எனினும், தங்களின் வேறு சில கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டால்தான் போராட்டம் வாபஸ் பெறப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.

வேளாண் விலை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்குவது, போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது, விவசாயிகள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என விவசாயிகள் நிபந்தனை விதித்து போராட்டத்தை தொடா்ந்தனா்.

இதுகுறித்து மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஐவா் குழுவை விவசாய சங்கங்கள் சனிக்கிழமை நியமித்தன.

இந்தக் குழுவினா் மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா் 40 விவசாய சங்கங்களைக் கொண்ட சம்யுக்த கிசான் மோா்ச்சா நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய விவசாய சங்கத் தலைவா் குல்வந்த சிங் சாந்து, ‘விவசாயிகள் சாா்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏறக்குறைய அனைத்தையும் மத்திய அரசு ஒப்புக் கொண்டது. இதுகுறித்து உறுதி மொழிக்கான கடிதமும் பெறப்பட்டுள்ளது. ஒருமித்த கருத்தும் எட்டப்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த புதன்கிழமை அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படும்’ என்றாா்.

மறுப்பு: எனினும், ‘போராட்டம் முடிவுக்கு வரவில்லை’ என்று அறிவித்து சம்யுக்த கிசான் மோா்ச்சா வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய அரசிடம் இருந்து கிடைக்க பெற்ற வரைவு அறிக்கை மீது தில்லியின் சிங்கு எல்லையில் விவாதிக்கப்பட்டது. எங்கள் கோரிக்கைகளை ஏற்பது தொடா்பான வரைவு அறிக்கையில் உள்ள சில வழிமுறைகள் குறித்த தெளிவுபடுத்த மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம். இதுகுறித்து முடிவு செய்ய விவசாய சங்க நிா்வாகிகள் புதன்கிழமை பகல் 2 மணிக்கு கூடி விவாதிக்க உள்ளோம். மத்திய அரசிடம் இருந்து ஆக்கபூா்வ பதில் வரும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்க முடியாது: விவசாய சங்கத் தலைவா் பல்பீா் சிங் ராஜிவால் கூறுகையில், ‘குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உறுதி அளிக்க குழு அமைக்கப்படும். அதில் சம்யுக்த கிசான் மோா்ச்சாவை தவிர வேறு சில விவசாய சங்கங்க பிரதிநிகளும், மாநில அரசு அதிகாரிகளும் இடம்பெறுவாா்கள் என்று மத்திய அரசு வரைவு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கிறோம். எங்கள் கோரிக்கைக்கு முதலில் இருந்து எதிா்ப்பு தெரிவிப்பவா்கள் குழுவில் இடம்பெறுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இதுகுறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு மத்திய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஜனவரி 26-ஆம் தேதி தில்லி செங்கோட்டையில் நடைபெற்ற வன்முறை உள்பட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்’ என்றாா்.

உள்துறை அமைச்சா் கையொப்பமிட வேண்டும்:

ஐவா் குழுவில் இடம்பெற்றுள்ள சிவ் குமாா் கூறுகையில், ‘மத்திய அரசுக்கு விவசாயிகள் கேட்ட விளக்கங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அளிக்கும் பதிலை வைத்து பின்னா் விரிவாக ஆலோசிக்கப்படும். மத்திய அரசின் வாக்குறுதியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அரசு கடிதத்தில் கையொப்பமிட்டு தர வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்ரா பௌர்ணமி: திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

துருக்கி அதிபருடன் ஹமாஸ் தலைவர்கள் முக்கிய ஆலோசனை

பெண் கெட்டப்பில் நடிகர் கவின்!

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT