இந்தியா

பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் மனு மீது ஜனவரியில் விசாரணை

 நமது நிருபர்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை ஜனவரி மாதத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் கருணை மனுவின் மீது முடிவு எடுப்பதில், 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்பட 3 பேரின் தண்டனையை 2014-இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
 2018, செப்டம்பர் 9-இல் பேரறிவாளன், நளினி, இவரது கணவர் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவைக்கூடி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
 இதனிடையே, 2020 அக்டோபர் 11-ஆம் தேதி பேரறிவாளன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இந்த வழக்கில் விடுதலை கோரி தமிழக ஆளுநருக்கு 2015-இல் அனுப்பிய மனு மீது முடிவு எடுக்கப்படவில்லை. தமிழக அரசு 2018-இல் அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவு எடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்' எனக் கோரப்பட்டிருந்தது.
 இந்த மனு கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, "இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் பரிந்துரை மீது அந்த மாநில ஆளுநர் 3-4 நாள்களில் அரசமைப்புச்சட்ட விதிகளின்படி முடிவெடுக்க உள்ளார்' எனத் தெரிவித்திருந்தார்.
 இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய அரசின் தரப்பில் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஆவணங்களையும் தமிழக ஆளுநர் பரிசீலித்தார். இதையடுத்து, ஜனவரி 25-ஆம் தேதியிட்ட அவரது உத்தரவில் சம்பந்தப்பட்ட தண்டனைக் குறைப்பு விவகாரத்தைக் கையாளும் உரிய அதிகார அமைப்பு இந்தியக் குடியரசுத் தலைவர்தான் எனப் பதிவு செய்துள்ளார். இந்த முன்மொழிவு குறித்து சட்டப்படி பரிசீலிக்கப்படும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
 மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, வேறு வழக்கு விசாரணையில் ஆஜராக வேண்டி உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 அதற்கு நீதிபதிகள், "கடந்த விசாரணையின் போது நீங்கள் முடிவு எடுத்து அனுப்புவதாகக் கூறினீர்கள். சட்டக் கடமை சுதந்திரத்தின் அடிப்படையில், எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என ஆளுநரிடம் நாங்கள் கேட்க முடியாது' என்று தெரிவித்தனர். அதற்கு துஷார் மேத்தா, "இந்த விஷயம் தொடர்பாக சில அறிவுறுத்தல்களைப் பெற வேண்டியுள்ளது' என்றார். அப்போது, வழக்குரைஞர்கள் எஸ்.பிரபு ராமசுப்ரமணியன், பாரிவேந்தன் ஆகியோருடன் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், "மனுதாரர் பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையின் மீதான ஆளுநரின் பரிந்துரை என்ன என்பதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும்' என்றார்.
 இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர். "இதுபோன்று மீண்டும் அவகாசம் கோர வேண்டாம்' என துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

400 தொகுதிகளில் வென்று மோடி மீண்டும் பிரதமராவாா் -நயினாா் நாகேந்திரன்

கோவையில் இன்று கனிமொழி பிரசாரம்

வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்! -பரபரப்பு குற்றச்சாட்டு

நாகை மக்களவைத் தொகுதி: 10 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT