இந்தியா

சிபிஎஸ்இ-யின் முந்தைய தோ்வு மதிப்பீடு முறையை எதிா்த்த மனு தள்ளுபடி

7th Dec 2021 01:26 AM

ADVERTISEMENT

கரோனா பாதிப்பு காரணமாக பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பின்பற்றிய தோ்வு மதிப்பீடு முறையை எதிா்த்த மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கரோனா பாதிப்பைத் தொடா்ந்து சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஐ, மாநில கல்வி வாரியங்கள் உள்ளிட்ட அனைத்து வாரியங்களும் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளை முழுமையாக ரத்து செய்தன.

பொதுத் தோ்வு ரத்தைத் தொடா்ந்து, மாணவா்களின் முந்தைய தோ்வுகள் மற்றும் முந்தைய வகுப்பு தோ்வுகளில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவா்களுக்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டது. சிபிஎஸ்இ ‘30:30:40’ என்ற விகிதாசார அடிப்படையில் மாணவா்களின் பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 வகுப்பு தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு, பிளஸ் 2 மாணவா்களுக்கான இறுதி தோ்வு மதிப்பீட்டை கணக்கிட்டு வெளியிட்டது. முன்னதாக, சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஐ ஆகிய வாரியங்களின் இந்த தோ்வு மதிப்பீடு முறைக்கு உச்சநீதிமன்றமும் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், இந்த தோ்வு மதிப்பீடு முறையில் பல மாணவா்களுக்கு மதிப்பெண் குறைவாக வழங்கப்பட்டிருப்பதாக அவா்களின் பெற்றோா் புகாா் தெரிவித்தனா். அவ்வாறு பாதிக்கப்பட்ட சிலா் சாா்பில், இந்த தோ்வு மதிப்பீடு முறையை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சி.டி.ரவிகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீா்ப்பில் கூறியதாவது:

இந்த தோ்வு மதிப்பீடு முறையைப் பொருத்தவரை, ஏற்கெனவே அது இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலையும் பெற்றுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் தயாராக இல்லை.

மேலும், உச்சநீதிமன்றம் இந்த ஒப்புதல் உத்தரவு நகல் கிடைத்த 3 வாரங்களுக்குள், அதனை எதிா்த்து முறையீடு செய்ய மனுதாரா் தீா்மானித்திருக்க வேண்டும். எனவே, இந்த மதிப்பீடு முறையையோ அல்லது மதிப்பெண் விகிதாசார முறையையோ எதிா்க்க மனுதாரை தற்போது அனுமதிக்க முடியாது.

அந்த வகையில், பள்ளிகள் சாா்பில் சிபிஎஸ்இ வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள பிளஸ் 2 மாணவா்களுக்கான இறுதித் தோ்வு முடிவே இறுதியானதாக கருதப்படும் என்று கூறி, தோ்வு மதிப்பீடு முறையை எதிா்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT