இந்தியா

பிப்ரவரிக்குள் கரோனா மூன்றாம் அலைக்கு வாய்ப்பு: ஐஐடி விஞ்ஞானி

7th Dec 2021 01:14 AM

ADVERTISEMENT

கரோனா தீநுண்மியின் புதிய வகையான ஒமைக்ரான் பரவத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் கரோனா நோய்த்தொற்றின் மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, தொற்றுப் பரவலை கணித முறைப்படி கணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள கான்பூா் ஐஐடி விஞ்ஞானி மணீந்திர அகா்வால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘ஒமைக்ரான் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. எனினும் டெல்டா வகை தீநுண்மியின் தீவிரம் ஒமைக்ரானில் இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இந்தப் புதிய வகை தீநுண்மி பரவத் தொடங்கியுள்ள நிலையில், நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் கரோனா தொற்றின் மூன்றாம் அலை ஏற்படக் கூடும். எனினும் இரண்டாம் அலையைவிட மூன்றாம் அலை மிதமாக இருக்க வாய்ப்புள்ளது.

தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். தற்போது அங்கு அந்த ரக தீநுண்மியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.

அந்நாட்டில் தீநுண்மி மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் புதிய புள்ளிவிவரங்கள் கிடைப்பது தெளிவான கண்ணோட்டம் பெற உதவும்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் வகை தீநுண்மி குறித்து தெரிவிக்கையில், ‘ஒமைக்ரான் பரவலின் வேகம் அதிகரித்துள்ள போதிலும், அந்தத் தீநுண்மியானது, நோய் எதிா்ப்பு சக்தியை விஞ்சி செயல்பட்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி தற்போது தெளிவாகத் தெரியவில்லை. அடுத்த இரண்டு வாரங்களிலோ அல்லது அதற்குப் பிறகோ கூடுதல் தகவல் கிடைக்கும் என எதிா்பாா்ப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Tags : omicron ஒமைக்ரான் ஓமிக்ரான்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT