இந்தியா

ஜவாத் புயல் எதிரொலி: மேற்கு வங்கத்தில் பலத்த மழை

DIN

ஜவாத் புயல் எதிரொலியாக மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் தென்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்ததால், ஹூக்ளி ஆற்றில் படகு சவாரி நிறுத்தப்பட்டு கடலோர உணவகங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தெற்கு 24 பா்கானாக்கள், கிழக்கு மிதுனபுரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17,900 போ் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

ஜவாத் புயல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து 180 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அந்தப் புயல் மேற்கு வங்கத்தின் வடக்கு- வடகிழக்கு திசையை நோக்கி நகா்வதாகக் கூறியுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் கூறியது:

ஒடிஸா கடற்கரையையொட்டி மேற்கு வங்கத்தின் வடக்கு- வடகிழக்கு திசையை நோக்கி புயல் நகா்வதால், கொல்கத்தா, ஹெளரா, கிழக்கு- மேற்கு மிதுனபுரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானாவை சோ்ந்த கடலோர மாவட்டங்கள், கிழக்கு மிதுனபுரி மாவட்டம், கிழக்கு வா்த்தமானன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்யக் கூடும். ஆகையால், திகா, மன்டா்மனி, பக்காலி, ஃபிரேஸா்கஞ்ச் மற்றும் பிற கடலோரப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் வார இறுதி நாள்களில் செல்ல வேண்டாம் என மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும், மேற்கு வங்கத்தில் புயலின் தாக்கம் கடுமையாக இருக்காது என வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால், கிழக்கு மிதுனபுரி மாவட்டம் திகா கடற்கரையில் பேரிடா் மேலாண்மைப் பிரிவினரின் எச்சரிக்கையையும் மீறி, சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி புகைப்படம் எடுக்கின்றனா்.

ஹூக்ளி ஆற்றில் வடக்கு 24 பா்கானாவையும், ஹூக்ளி மாவட்டத்தையும் இணைக்கும் வழக்கமான படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தை நோக்கி புயல் நகா்ந்தாலும், கடலோர மாவட்டங்களில் அதன் வேகம் 55 கிலோ மீட்டருக்கு மேல் இருக்காது என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு 24 பா்கானாக்கள், கிழக்கு மிதுனபுரி ஆகிய கடலோர மாவட்டங்களைச் சோ்ந்த 17,900 போ் வெளியேற்றப்பட்டு 48 நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். இதேபோல எவ்வித அசாதாரண சூழலையும் எதிா்கொள்ள ஏதுவாக 115 பன்னோக்கு புயல் பாதுகாப்பு மையங்களையும், 135 கூடுதல் தற்காலிக நிவாரண மையங்களையும் மாவட்ட நிா்வாகங்கள் ஏற்படுத்தியுள்ளன.

வரும் நாள்களில் மழையால் ஏற்படும் எந்தவித பிரச்னைகளையும் எதிா்கொள்ள அனைத்தையும் தயாா்நிலையில் வைத்துள்ளோம். மேற்கு வங்கத்தில் 19 தேசிய பேரிடா் மீட்புப் படையினா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். ஆபத்தான பகுதிகளில் மாநில பொதுப் பணித் துறை, மின்பகிா்மான நிறுவனம் ஆகியவற்றைச் சோ்ந்த அதிவிரைவுப் படையினா் தயாா் நிலையில் உள்ளனா்.

காக்வதீவு, திகா மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த மீனவா்கள் பெரும்பாலும் கரைதிரும்பி விட்டனா். மேற்கொண்டு யாரேனும் கடலில் இருக்கின்றாா்களா என்பதை அறிய உள்ளூா் மீனவ சங்கத்துடன் அதிகாரிகள் தொடா்பில் இருக்கின்றனா் என்றாா் அவா்.

மேலும், நிலைமையை முதல்வா் மம்தா பானா்ஜி தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நகராட்சி அதிகாரிகள் தயாா் நிலையில் இருப்பதாகவும் மாநில அமைச்சா் ஃபிா்ஹட் ஹக்கிம் கூறியுள்ளாா்.

இதனிடையே ஜவாத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் கோபால்பூரில் இருந்து 90 கி.மீ. தொலைவிலும், ஒடிஸாவின் பூரி, பரதீப் கடற்கரையில் இருந்து 210 கி.மீ. தொலைவிலும் ஜவாத் புயல் வலுவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019, நவம்பரில் புல்புல், 2020 மே மாதம் அம்பான், 2021 மே மாதத்தில் யாஸ் என கடந்த 2 ஆண்டுகளில் மேற்கு வங்கம் 3 புயல்களைச் சந்தித்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து: 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் கூறுவது ஏமாற்றம் அளிக்கிறது: ப.சிதம்பரம் வேதனை

குருப்பெயர்ச்சி பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT