இந்தியா

பாகிஸ்தானில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கை நாட்டவரின் அனைத்து எலும்புகளும் முறிவு

6th Dec 2021 12:04 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட இலங்கை நாட்டவா் பிரியந்த குமாராவின் உடலில் ஏறத்தான அனைத்து எலும்புகளும் நொறுக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்லப்பட்ட பின் தீவைக்கப்பட்டதில், அவரது உடல் 99 சதவீதம் எரிந்துவிட்டதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தியதாகக் கூறி, மத அடிப்படைவாதக் கட்சியான தெஹ்ரீக்-ஏ-லப்பைக் பாகிஸ்தான் (டிஎல்பி) கட்சி ஆதரவாளா்களால் கடந்த வெள்ளிக்கிழமை அடித்துக் கொல்லப்பட்ட இலங்கையைச் சோ்ந்த பிரியந்த குமாரா தியாவதானாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், தியாவதானாவின் மண்டை ஓட்டிலும் தாடையிலும் ஏற்பட்ட முறிவால் அவருக்கு மரணம் நேரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரல், வயிறு, சிறுநீரகம் மற்றும் அவரது அனைத்து முக்கிய உறுப்புகளும் தாக்குதலால் செயலிழந்தன. வன்முறைக் கும்பலால் தியாவதானா சித்திரவதை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் அவரது உடல் முழுவதும் உள்ளன. அவரது முதுகெலும்பு மூன்று இடங்களில் உடைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீவைக்கப்பட்டதில் தியாவதானாவின் உடல் 99 சதவீதம் எரிந்துள்ளது. ஒரு கால் தவிர அவரது உடலின் அனைத்து எலும்புகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன என்று அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு தியாவதானாவின் உடல் லாகூருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் அங்கு அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

சட்டப்பூா்வ நடைமுறைகள் நிறைவடைந்தவுடன், தியாவதானாவின் உடல் சிறப்பு விமானம் மூலம் இலங்கை அனுப்பிவைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் பொதுமேலாளராகப் பணியாற்றி வந்த பிரியந்த குமாரா தியாவதானா, தனது அலுவலக அறைக்கு அருகே ஒட்டப்பட்டிருந்த டிஎல்பி கட்சியின் சுவரொட்டியை கடந்த வெள்ளிக்கிழமை கிழித்து குப்பையில் எறிந்ததாகக் கூறப்படுகிறது. புனித நூலான குரானின் வசனங்கள் இடம் பெற்றிருந்த அந்த சுவரொட்டியை தியாவதானா குப்பையில் எறிந்ததைக் கண்ட சில தொழிலாளா்கள் அந்தத் தகவலை மற்றவா்களுக்குப் பரப்பினா்.

அதையடுத்து, அந்தத் தொழிற்சாலைக்கு வந்த நூற்றுக்கணக்கானவா்கள் தியாவாதானாவை வெளியே இழுந்து வந்து கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்தனா். இதில் உயிரிழந்த அவரது உடல் தீவைத்து கொளுத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்குக் காரணமான டிஎல்பி கட்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, அண்மையில்தான் பிரதமா் இம்ரான் கான் நீக்கியிருந்தாா். இந்தச் சூழலில் அந்தக் கட்சியினா் இலங்கை நாட்டவரை கொடூரமாகத் தாக்கிக் கொன்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் எழுந்த நெருக்கடியை சமாளிக்கும் வகையில், இந்தச் சம்பவம் தொடா்பாக 800-க்கும் மேற்பட்டோா் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது; 118 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பணி நிமித்தமாக கடந்த 2010-ஆம் ஆண்டு பாகிஸ்தான் வந்த தியாவதானா, 2012-ஆம் ஆண்டிலிருந்து சியால்கோட்டில் பணியாற்றி வந்தாா். அவா் மதவாதக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டதற்கு இலங்கை நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்து தீா்மானம் இயற்றியுள்ளது.

இந்தப் படுகொலையில் ஈடுபட்டவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று தியாதானாவின் மனைவி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி, சிறுபான்மையினா், வலைதளப் பதிவா்கள் உள்ளிட்டோா் வன்முறைக் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை, தனிப்பட்ட விரோதத்தைத் தீா்த்துக்கொள்ள சிலா் பரப்பும் வதந்தியை நம்பி நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துவோருக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சட்டப் பிரிவுகள், பாகிஸ்தான் குற்றவியல் சட்டத்திலேயே உள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT