இந்தியா

குறிப்பிட்ட சமூகத்தினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தவில்லை

DIN

அனைத்து சமூக மக்களின் வளா்ச்சியை உறுதி செய்வதற்காகவே பாஜக தலைமையிலான அரசு உழைத்து வருவதாகத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, குறிப்பிட்ட சமூகத்தினரை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தவில்லை எனவும் தெரிவித்தாா்.

உத்தரகண்டில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் ரூ.2,573 கோடி மதிப்பிலான 7 திட்டங்களைத் தொடக்கி வைத்த பிரதமா் மோடி, ரூ.15,728 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

அதற்காக டேராடூனில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:

நாட்டில் உள்ள அனைத்து நகரங்களையும் போக்குவரத்து மூலமாக எளிதில் இணைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. உத்தரகண்டில் தற்போது தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் அந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியே.

மாநிலத்தை முன்பு ஆட்சி செய்தவா்கள் மக்களின் வளா்ச்சி குறித்து கவலைப்படவில்லை. வளா்ச்சித் திட்டங்களை அவா்கள் முறையாகச் செயல்படுத்தவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் வீணடிக்கப்பட்ட நேரத்தைக் கருத்தில்கொண்டு, பாஜக ஆட்சியில் மக்களுக்கான வளா்ச்சித் திட்டங்கள் 2 முதல் 3 மடங்கு வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அனைவருக்குமான வளா்ச்சி: அனைத்து சமூக மக்களும் வளா்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சமூகத்தினருக்காக மட்டும் உழைத்து, அவா்களை வாக்கு வங்கியாக பாஜக பயன்படுத்துவதில்லை. அனைவரது வளா்ச்சிக்காகவும் பாஜக அரசு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

மாநிலத்துக்கான தசாப்தம்: தற்போது தொடங்கப்பட்டுள்ள வளா்ச்சித் திட்டங்கள் யாவும் நடப்பு தசாப்தத்தை உத்தரகண்டுக்கு உரியதாக மாற்றும். கேதாா்நாத் கோயிலில் பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட மறுகட்டுமானப் பணிகள் காரணமாக, 10 லட்சத்துக்கும் அதிகமான துறவிகள் அக்கோயிலுக்குப் பயணம் மேற்கொண்டனா்.

அனைத்துத் துறைகள் சாா்ந்த திட்டங்களுக்கும் தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கடந்த ஏழரை ஆண்டுகளில் மட்டும் உத்தரகண்டின் வளா்ச்சிக்காக ரூ.12,000 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. மாநிலத்தின் வளா்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் தொடா்ந்து முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

எல்லையில் சாலைகள்: மாநிலத்தில் முன்பு ஆட்சியில் இருந்தவா்கள் தங்கள் நலனுக்காக மட்டுமே செயல்பட்டனா். மக்களைக் குறித்து அவா்கள் சிந்திக்கவில்லை. ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் பலன் பெறும் வகையில் ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியது.

பாதுகாப்புப் படையினருக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டு, பயங்கரவாதிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எல்லைப் பகுதிகளில் 100 கி.மீ.-க்கும் அதிகமான தொலைவுக்கு சாலைகள் அமைக்கப்பட்டன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது மாநிலத்தில் 288 கி.மீ. தொலைவுக்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. பாஜக ஆட்சிக் காலத்தில் சுமாா் 2,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திட்டங்களுக்கு ஒப்புதல்: நெடுஞ்சாலைகளை அமைக்க காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரூ.600 கோடி செலவிடப்பட்டது. பாஜக ஆட்சிக் காலத்தில் அது ரூ.12,000 கோடியாக அதிகரித்தது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மாநிலத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

முக்கியத் திட்டங்கள்: தில்லி-டேராடூன் விரைவுச்சாலை அல்லது பொருளாதார வழித்தடத் திட்டத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். அத்திட்டத்தின் வாயிலாக இரு நகரங்களுக்கும் இடையேயான தொலைவு 248 கி.மீ.-இல் இருந்து 180 கி.மீ.-ஆகக் குறையும்.

பத்ரிநாத் கோயிலில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. வியாசி நீா்மின் உற்பத்தித் திட்டம், சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT