இந்தியா

'நாயைப் போல் தூங்கும் காவல் துறையினர்': கர்நாடக உள்துறை அமைச்சர் பேச்சால் சர்ச்சை

4th Dec 2021 06:29 PM

ADVERTISEMENT


கர்நாடகத்தில் காவலர்கள் சிலர் மாடுகளைக் கடத்துபவர்களிடம் லஞ்சம் வாங்கி, நாய்களைப் போல் தூங்குவதாக உள்துறை அமைச்சர் அராகா ஞானேந்திரா பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

அமைச்சர் பேசுவதாக வைரலாகும் விடியோவில், காவல் துறை அதிகாரி ஒருவரிடம் அவர் கடுமையாகக் கோபித்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதில் அமைச்சர் பேசுவது, "மாடுகளைக் கடத்துபவர்கள் குற்றத்தில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள். உங்கள் அதிகாரிகளுக்கு அது தெரியும். ஆனால், அவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, நாய்களைப் போல் தூங்குகிறார்கள். உங்கள் காவல் துறைக்கு சுயமரியாதை தேவை.

ஒட்டுமொத்த காவல் துறையும் கெட்டுப்போகியுள்ளது. நாங்கள் ஊதியம் கொடுக்கிறோம். ஆனால், ஊதியத்தில் மட்டுமே வாழ எவருக்கும் விருப்பம் கிடையாது. லஞ்சத்திலும் வாழ வேண்டும்."

ADVERTISEMENT

இதையும் படிக்கஒமைக்ரானால் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படுமா?: மூத்த விஞ்ஞானி தகவல்

இந்த விடியோ அதிகளவில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, இதுகுறித்து அமைச்சர் விளக்கமளித்தார்.

அமைச்சர் விளக்கம்:

"சிவமோகா மாவட்டத்திலுள்ள கிராமத்தில் விலங்குகள் நல ஆர்வலர்கள் இருவர் மாடுகளைக் கடத்தும் வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர். அவர்கள் மீது மோதிவிட்டு அந்த வாகனம் சென்றுள்ளது. அவர்களது உடல்நிலை மோசமாக உள்ளது. பெங்களூருவிலுள்ள மணிபால் மருத்துவமனையில் அவர்களைச் சேர்க்க நான்தான் ஏற்பாடு செய்தேன். இது எனக்கு மிகுந்த வலியைத் தந்தது. இது மனிதாபிமானமற்றச் செயல்.  

இதைத் தடுப்பதற்கானப் புதிய பசுவதைத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தும், குற்றவாளிகளுக்கு எதிராக காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. இதன் பின்னணியில் நான் கோபமாகப் பேசினேன். நான் எல்லா காவலர்களையும் குறிப்பிடவில்லை. குறிப்பிட்ட சில பிரிவினரை மட்டுமே குறிப்பிட்டேன்."

கர்நாடகத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டு பிப்ரவரியிலிருந்து நடைமுறையில் உள்ளது.

Tags : Karnataka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT