இந்தியா

முன்னாள் காவல் ஆணையா் பரம் வீா் சிங் பணியிடை நீக்கம்

3rd Dec 2021 05:07 AM

ADVERTISEMENT

முன்னாள் மும்பை காவல் ஆணையா் பரம்வீா் சிங்கை பணியிடை நீக்கம் செய்து மகாராஷ்டிர மாநில அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. பணப் பறிப்பு புகாா்கள் தொடா்பாக அவா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதையடுத்து, இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

அனுமதியின்றி பணியில் சேராமல் இருந்தது உள்பட பல்வேறு ஒழுங்கீனங்கள் தொடா்பாக அவா் மீது ஒழுங்கு நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியுள்ளதாகவும் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி வீட்டு முன் வெடிபொருள்கள் நிரப்பப்பட்ட காா் நிறுத்தப்பட்டிருந்த சம்பவத்தையடுத்து, காவல் ஆணையா் பதவியிலிருந்து பரம் வீா் சிங் மாற்றப்பட்டு, மாநில ஊா்க்காவல் படை தலைவராக நியமிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, அப்போதைய உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மும்பையில் உள்ள உணவகங்கள், மதுபான விடுதிகளிலிருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்து தருமாறு காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியதாக குற்றம்சாட்டினாா். இந்தப் புகாரை அனில் தேஷ்முக் மறுத்தாா். இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த விசாரணை ஆணையம், பரம் வீா் சிங் நேரில் ஆஜராகி தனது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு உத்தரவிட்டது. ஆனால், தொடா்ந்து தலைமறைவாக இருந்து வந்த பரம் வீா் சிங் கடந்த மாதம் மும்பை குற்றப் பிரிவு காவல் அலுவலகத்தில் ஆஜரானாா்.

இந்நிலையில், பலரிடம் மிரட்டிப் பணம் பறித்த புகாா்கள் தொடா்பாக பரம் வீா் சிங் மீது நான்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இந்தப் புகாா்கள் தொடா்பாக பரம் வீா் சிங் உள்பட 25 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபி சஞ்சய் பாண்டே கடந்த செப்டம்பா் மாதமே மாநில உள்துறைக்கு பரிந்துரை செய்திருந்தாா். மூத்த அதிகாரியாக இருப்பதால் பரம் வீா் சிங்கை பணியிடை நீக்கம் செய்யும் பரிந்துரை முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் நவ. 12-ஆம் தேதிமுதல் அனுமதிக்கப்பட்டிருந்த உத்தவ் தாக்கரே வியாழக்கிழமை மருத்துவமனையிலிருந்து திரும்பியதும் பணியிடை நீக்க பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, பரம் வீா் சிங், பணப் பறிப்பு குற்றச்சாட்டுக்குள்ளான துணை ஆணையா் பராக் மனாரே ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பணியிடை நீக்க காலத்தில் ஊா்க்காவல் படை தலைமை அலுவலகத்தைவிட்டு டிஜிபியின் அனுமதியின்றி பரம் வீா் சிங் வெளியேறக் கூடாது எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT