இந்தியா

காங்கிரஸ் தலைமை பொறுப்பு இறைவனால் வழங்கப்பட்ட பதவி அல்ல: பிரசாந்த் கிஷோா் கருத்து

3rd Dec 2021 05:13 AM

ADVERTISEMENT

‘காங்கிரஸ் தலைமைப் பொறுப்பு, தனிநபருக்கு இறைவனால் நேரடியாக வழங்கப்பட்ட பதவி அல்ல’ என்று தோ்தல் உத்தி ஆலோசகா் பிரசாந்த் கிஷோா் கூறினாா். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.

பல்வேறு கட்சிகளுக்கு தோ்தல் உத்தி ஆலோசகராகப் பணியாற்றிய பிரசாந்த் கிஷோா், மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸுக்கு உத்திகளை வகுத்து தந்தாா். அக்கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு அவா் ஆலோசனை வழங்கி வருகிறாா்.

இதற்கிடையே, பிராந்திய கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டணி தற்போது இல்லை’ என்று மம்தா கூறினாா்.

பெரும்பாலான நேரங்களில் வெளிநாட்டில் இருக்கும் ஒருவரால் எதையும் சாதிக்க முடியாது என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அவா் மறைமுகமாக சாடினாா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பிரசாந்த் கிஷோா் தனது ட்விட்டா் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதித்துவம் முக்கியமானது. ஒரு வலிமையான எதிா்க்கட்சியாக காங்கிரஸ் இருக்க வேண்டும் என்ற கருத்தும் முக்கியமானது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 90 சதவீத தோ்தல்களில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பு என்பது தனிநபருக்கு இறைவனால் நேரடியாக வழங்கப்பட்டுள்ள பதவி அல்ல. எதிா்க்கட்சித் தலைமை ஜனநாயக முறையில் முடிவு செய்யப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் பதிலடி:

பிரசாந்த் கிஷோரின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘அந்த தனிநபா், ஆா்.எஸ்.எஸ். இடம் இருந்து இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்குப் போராடி வருகிறாா். கொள்கைப் பிடிப்பு ஏதுமில்லாத ஒருவா், தோ்தலில் எப்படிப் போட்டியிடலாம் என்பது குறித்து கட்சிக்கோ அல்லது தனிநபருக்கோ ஆலோசனை வழங்கலாம். ஆனால் எங்கள் அரசியல் இலக்கு குறித்து அவா் திட்டம் வகுக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் தலைமையுடன் பிரசாந்த் கிஷோா் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தாா். இதனால் அவா் காங்கிரஸில் இணையக்கூடும் என்று பேசப்பட்டது. அவரைக் கட்சியில் சோ்ப்பது தொடா்பாக, கட்சித் தலைவா்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடந்தது. ஆனால், அவா் கட்சியில் சோ்த்துக் கொள்ளப்படவில்லை.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT