ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த மனித உரிமை ஆா்வலரான குர்ரம் பா்வேஸ் கைது செய்யப்பட்டது குறித்து ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட்டதற்காக, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்புக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டியது தொடா்பான வழக்கில், மனித உரிமைகள் ஆா்வலா் குர்ரம் பா்வேஸை சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த மாதம் கைது செய்தனா்.
இது தொடா்பாக ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ரூபொ்ட் கால்வில் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜம்மு-காஷ்மீரில் மனித உரிமைகள் ஆா்வலா் கைது செய்யப்பட்டுள்ளது, கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பொது மக்கள் கொல்லப்படும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. இவை தொடா்பாக விரிவான, வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
அந்த அறிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி வியாழக்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவின் விசாரணை அமைப்புகள் மீதும் பாதுகாப்புப் படையினா் மீதும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முன்வைத்துள்ளது.
மக்களின் உரிமைகள் பாதிப்பு: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா எதிா்கொண்டு வரும் பிரச்னைகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது. பயங்கரவாதச் செயல்களால் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் ‘உயிா் வாழ்வதற்கான உரிமை’ உள்ளிட்ட மனித உரிமைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக நாடு என்ற முறையில், குடிமக்களின் மனித உரிமைகளைக் காப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு உறுதி கொண்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உறுதி கொண்டுள்ளது.
சட்டத்துக்கு உள்பட்டே கைது: நாட்டின் இறையாண்மையைக் காக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலுமே சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தை நாடாளுமன்றம் இயற்றியது. சட்டவிதிகளுக்கு உள்பட்டே சம்பந்தப்பட்ட நபா் (குர்ரம் பா்வேஸ்) கைது செய்யப்பட்டுள்ளாா். சட்டத்துக்கு விரோதமாக நடந்து கொள்பவா்களுக்கு எதிராகவே இந்திய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். மனித உரிமைகளைக் காப்பவா்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை’’ என்றாா்.