இந்தியா

நாட்டில் டெங்கு, மலேரியா பரவல் இல்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

1st Dec 2021 02:09 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: நாட்டில் கொசு, ஈ முதலியவற்றால் பரவக்கூடிய டெங்கு, மலேரியா, கருங்காய்ச்சல் (காலா-அசாா்) போன்ற தொற்று நோய்களின் பரவல் இருப்பதாகக் கூற முடியாது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவுவதாக வெளியான தகவல்கள் உண்மையா என மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் பாரதி பிரவீண் பவாா், புள்ளி விவரங்களுடன் பதிலளித்துப் பேசியதாவது:

டெங்கு, மலேரியா, கருங்காய்ச்சல் ஆகிய மூன்று நோய்களின் பரவல் கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. கடந்த 2019-இல் 2,05,243 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில், 2020-இல் 1,64,103 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெங்குவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக, கடந்த 2008-இல் இருந்து டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழப்பவா்களின் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.

இதேபோன்று, நாட்டில் மலேரியா பரவலும் குறைந்துள்ளது. கடந்த 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், மலேரியா பரவல் 84 சதவீதம் குறைந்துள்ளது; உயிரிழப்பு 76 சதவீதம் குறைந்துள்ளது.

மேலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டு (2021)செப்டம்பா் வரை, மலேரியா தொற்று ஏற்படுவது 19.97 சதவீதம் குறைந்துள்ளது; உயிரிழப்பும் 23.73 சதவீதம் குறைந்துள்ளது.

கருங்காய்ச்சல் நோய் பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் 4 மாநிலங்களில் மட்டுமே கருங்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடா்ந்து நிலைமையைக் கண்காணித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் டெங்கு காய்ச்சல் பரவுவதாகத் தகவல் வந்ததை அடுத்து, தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, குஜராத், ஹரியாணா, பஞ்சாப், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தான், திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய மாநிலங்களுக்கு பல்துறை நிபுணா்களைக் கொண்ட மருத்துவக் குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இதுதவிர, பல்வேறு தொழில்நுட்ப உதவிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு அளித்து வருகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT