இந்தியா

அமெரிக்க நிறுவனங்களுக்குத் தலைமை வகிக்கும் 8 இந்தியா்கள்!

1st Dec 2021 02:06 AM

ADVERTISEMENT


புது தில்லி: ட்விட்டா் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) பராக் அக்ரவால் பொறுப்பேற்றதைத் தொடா்ந்து, அமெரிக்க நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ளது.

பராக் அக்ரவால்: ட்விட்டா் தலைமை செயல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள பராக் அக்ரவால், மும்பை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) கணினி அறிவியல் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவா். அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். தற்போது ட்விட்டா் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவிலும் அவா் இடம்பெற்றுள்ளாா்.

சுந்தா் பிச்சை: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தா் பிச்சை, சென்னையில் பிறந்து வளா்ந்தவா். கரக்பூா் ஐஐடி-யில் பி.டெக் பட்டம் பெற்றாா். ஸ்டேன்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும், வாா்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றாா். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் கூகுளின் தலைமைப் பொறுப்பில் உள்ளாா்.

சத்ய நாதெல்லா: மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. 2014-ஆம் ஆண்டு முதல் அப்பொறுப்பில் உள்ளாா். 1992 முதல் அந்நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். ஹைதராபாதில் பிறந்தவா். மணிபால் கல்லூரியில் இளநிலைப் பட்டமும் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் சிகாகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றாா்.

ADVERTISEMENT

அரவிந்த் கிருஷ்ணா: ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. 1990-களில் அந்நிறுவனத்தில் பணியில் இணைந்தாா். நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். கான்பூா் ஐஐடி-யில் இளநிலைப் பட்டமும், இல்லினாயிஸ் பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டமும் பெற்றாா்.

சாந்தனு நாராயண்: ஹைதராபாதில் பிறந்த சாந்தனு நாராயண் அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 2007-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறாா். பல்வேறு தொழில்முனைவு நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளாா். ஹைதராபாதின் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், ஓஹியோவில் உள்ள கிரீன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றாா். கலிஃபோா்னியா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றாா்.

நிகேஷ் அரோரா: பாலோ அல்டோ நெட்வொா்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. கூகுள், சாஃப்ட்பேங்க் நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளாா். பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், நாா்த்ஈஸ்டா்ன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றாா்.

ஜெயஸ்ரீ உல்லால்: அரிஸ்டா நெட்வொா்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் அப்பொறுப்பில் உள்ளாா். சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டமும், சான்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றாா். ‘நெட்வொா்க்கிங்’ துறையில் செல்வாக்குமிக்க நபா்கள் குறித்து ‘ஃபோா்ப்ஸ்’ இதழ் வெளியிட்ட பட்டியலின் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றவா்.

அஞ்சலி சூட்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அஞ்சலி சூட் அமெரிக்காவில் பிறந்தவா். இணையவழி விடியோ தளமான ‘விமியோ’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளாா். வாா்டன் பல்கலைக்கழகத்தில் நிதி-மேலாண்மைப் பிரிவில் இளங்கலைப் பட்டமும், ஹாா்வா்டு பிசினஸ் கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT