இந்தியா

வருமான வரி தளத்தில் தொடர் கோளாறு: இன்ஃபோசிஸ் சிஇஓவுக்கு நோட்டீஸ்

22nd Aug 2021 04:45 PM

ADVERTISEMENT

வருமான வரியை தாக்கல் செய்தவற்கான இணைய தளத்தில் கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், இன்ஃபோசிஸின் தலைமை செயல் அலுவலருக்கு நிதித்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வருமான வரியை தாக்கல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட புதிய இணை தளத்தில் தொடர் கோளாறு ஏற்பட்டுள்ளது. ஜூன் மாதத்திலிருந்து இந்த புதிய தளம் பயன்பாட்டில் இருந்துவரும் நிலையில், தளத்தில் ஏற்படும் கோளாறுகள் குறித்து விளக்கமளிக்க இன்ஃபோசிஸின் தலைமை செயல் அலுவலர் சலில் பரேக்குக்கு நிதித்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாகவே, புதிய தளம் குறித்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறை தெரிவித்திருந்தார். புதிய தளத்தை பயனாளர்கள் ஏற்கும் வகையில் மேம்படுத்த சலில் பரேக், மூத்த நிர்வாக அலுவலர் பிரவீன் ராவ் ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "தொடங்கப்பட்டு இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் புதிய இணைய தளத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் தீர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சரிடம் விளக்கமளிக்க இன்ஃபோசிஸ் தலைமை செயல் அலுவலர் சலில் பரேக்குக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆகஸ்ட் 21ஆம் தேதி, இணையதளம் இயங்கவில்லை" என பதிவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்கசென்னை அன்றும்..இன்றும்.. சுவாரசிய தகவல்கள்!

இன்ஃபோசிஸ் நிறுவனம்தான், புதிய தளத்தை வடிவமைத்துள்ளது. பயன்பாட்டிற்கு வந்த பிறகு, தளத்தில் கோளாறுகள் ஏற்படுவதாக பயனாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, கோளாறுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து நிதியமைச்சரை டேக் செய்து பலர் ட்வீட் செயதிருந்தனர்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT