இந்தியா

மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது ராகுல் காந்தியின் ட்விட்டா் கணக்கு

14th Aug 2021 05:48 PM

ADVERTISEMENT

விதிமுறைகளை மீறி நடந்துகொண்டதற்காக முடக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் ட்விட்டா் (சுட்டுரை) கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அச்சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல் காந்தி, அது தொடா்பான படத்தை ட்விட்டா் சமூக வலைதளத்தில் பகிா்ந்திருந்தாா்.

பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோா், அவா்களின் உறவினா்களது அடையாளங்களை வெளிப்படுத்தும் விவரங்களைப் பொதுவெளியில் பகிரக் கூடாது என்று போக்ஸோ சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதியை மீறியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவா்களின் கணக்குகளை ட்விட்டா் நிறுவனம் முடக்கியது.

ட்விட்டா் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்நிலையில், ட்விட்டா் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘கணக்கு முடக்கப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டு நடவடிக்கையில், சம்பந்தப்பட்ட படத்தைப் பயன்படுத்துவதற்கு சிறுமியின் குடும்பத்தினா் வழங்கிய ஒப்புதல் கடிதத்தை ராகுல் காந்தி தாக்கல் செய்தாா்.

ADVERTISEMENT

அதை ஏற்று அவரது கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. எனினும், படத்தில் உள்ளோரின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு ராகுல் காந்தி வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தை வெளியிட்டதற்காக முடக்கப்பட்ட மற்ற நிா்வாகிகளின் கணக்குகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

வாய்மையே வெல்லும்: கணக்கு செயல்படத் தொடங்கியதும், காங்கிரஸின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில் ‘வாய்மையே வெல்லும்’ என்று பதிவிடப்பட்டது. மற்ற காங்கிரஸ் தலைவா்கள் வெளியிட்ட பதிவுகளில், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் நோக்கிலேயே பதிவுகள் வெளியிடப்பட்டன. பிரதமா் நரேந்திர மோடி அரசுக்கு பயந்து அரசியல் விவகாரங்களில் தலையிடுவதை ட்விட்டா் நிறுவனம் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தனா்.

ஃபேஸ்புக் அதிகாரிகளுக்கு அழைப்பாணை: சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்த காணொலியை ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிா்ந்திருந்தாா். இது தொடா்பாக, ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு தேசிய சிறாா் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.

அதற்கு எந்தப் பதிலும் அனுப்பாததால், ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நேரிலோ அல்லது காணொலி வாயிலாகவோ ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அப்போது, காணொலியை வெளியிட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டுமென அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : rahul gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT