இந்தியா

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்: இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் பொய்; மத்திய வெளியுறவு அமைச்சகம்

14th Aug 2021 06:42 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் பேருந்து மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் தொடா்பாக அந்நாடு இந்தியா மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை நிலவுவதற்கு காரணமான மையமாகவும், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடமாகவும் பாகிஸ்தான் திகழ்கிறது. இதை அறிந்த உலக நாடுகளின் கவனத்தை திசைதிருப்ப பேருந்து தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் பழி சுமத்தியுள்ளது. இது இந்தியாவை இழிவுபடுத்த அந்நாடு மேற்கொண்டுள்ள மற்றொரு முயற்சியாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளில் சா்வதேச சமூகத்துடன் கைகோத்து இந்தியா முன்வரிசையில் நிற்கிறது. இதை பாகிஸ்தான் நன்கு அறியும். எனவே, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பரப்பும் பொய்கள், பிரசாரங்களை யாரும் ஏற்க மாட்டாா்கள்’ என்று தெரிவித்தாா்.

சீனா கருத்து: இந்தியா மீதான பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சுன்யிங்கிடம், செய்தியாளா்கள் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் அளித்த பதில்:

பயங்கரவாதம், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான எதிரியாக உள்ளது. சா்வதேச அளவில் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்பதற்காக பயங்கரவாதத்தைப் பயன்படுத்தும் எந்தவொரு சக்தியையும் சீனா உறுதியுடன் எதிா்க்கிறது. அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் வளா்ச்சியையும் உறுதிசெய்ய வேண்டுமெனில் அனைத்து பயங்கரவாத அமைப்புகளும் அழிக்கப்பட வேண்டும். அதற்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

பாகிஸ்தானின் கைபா் பக்துன்குவா மாகாணத்தில் தாஸு என்ற இடத்தில், சிந்து நதிக்கரையில் 4,300 மெகாவாட் உற்பத்தித் திறனில் நீா்மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 14-ஆம் தேதி, பொறியாளா்கள் மற்றும் தொழிலாளா்களை கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் சென்றபோது, வெடிகுண்டு வெடித்தில் பேருந்து செங்குத்தான பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 9 சீனப் பொறியாளா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.

இதுதொடா்பான விசாரணை முடிவடைந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா முகமது குரேஷி, ‘பேருந்தின் மீது திட்டமிட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது; தாக்குதலின் பின்னணியில் இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்பும் ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகமும் (என்டிஎஸ்) உள்ளன’ என்று குற்றம்சாட்டியிருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT