இந்தியா

பெகாஸஸ் விவகாரம்: பிரதமர் மோடி மெளனம் காப்பது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி

11th Aug 2021 03:49 AM

ADVERTISEMENT

பெகாஸஸ் உளவு மென்பொருளை உருவாக்கிய என்எஸ்ஓ குழுமத்துடன் எந்த பணப் பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரம் உள்பட அனைத்து அமைச்சகங்களின் சார்பிலும் பிரதமர் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியும் என்ற நிலை இருக்கும்போது, இதுவரை அவர் மெளனம் காப்பதன் காரணம் என்ன என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.
 இ ஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ குழுமத்தின் பெகாஸஸ் உளவு மென்பொருள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய நபர்களது தொலைபேசிகளை ஊடுருவி ஒட்டுக்கேட்கப் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 இந்நிலையில், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், திங்கள்கிழமை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, என்எஸ்ஓ குழுமத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் எந்தவித பணப் பரிவர்த்தனையும் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார்.
 இந்த விளக்கத்தை மேற்கோள் காட்டி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில் கூறியிருப்பதாவது:
 இஸ்ரேலின் என்எஸ்ஓ குழுமத்துடன், பாதுகாப்பு அமைச்சகம் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஈடுபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்தக் கருத்து சரியானதாக இருக்கும்பட்சத்தில், மீதமுள்ள மேலும் சில துறைகளின் மீது எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பில் பிரதமர் மோடி மட்டுமே பதிலளிக்க முடியும். ஆனால், அவர் தொடர்ந்து ஏன் மெளனம் காக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.
 பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல், அஸ்வினி வைஷ்ணவ், தொழிலதிபர் அனில் அம்பானி, 40 பத்திரிகையாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட இந்திய செல்லிடப்பேசி எண்கள் உளவு பார்க்கப்படும் சாத்தியக்கூறு பட்டியலில் உள்ளதாக சர்வதேச ஊடக கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைத்து எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து வருகிறது.

Tags : Pegasus row
ADVERTISEMENT
ADVERTISEMENT