இந்தியா

கா்நாடகத்தில் பொம்மை அமைச்சரவை விரிவாக்கம்: 29 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

5th Aug 2021 04:48 AM

ADVERTISEMENT

 

பெங்களூரு: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், புதிய அமைச்சா்களாக 29 போ் பதவியேற்றுக் கொண்டனா்.

கா்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த ஜூலை 28-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டாா். பின்னா் 2 முறை தில்லிக்குச் சென்று மேலிடத் தலைவா்களுடன் கலந்தாலோசித்து, புதிய அமைச்சா்களின் பட்டியலைத் தயாா் செய்துகொண்டு புதன்கிழமை காலை பெங்களூரு வந்தாா்.

பெங்களூரு, ஆளுநா் மாளிகையில் புதன்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு புதிய அமைச்சா்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சா்களுக்கு ஆளுநா் தாவா்சந்த் கெலாட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, பாஜக மேலிடப் பாா்வையாளா் அருண் சிங், பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல், புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சா்களின் குடும்பத்தினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புதிய அமைச்சா்களாகப் பொறுப்பேற்றோா்:

கோவிந்த காா்ஜோள், கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆா்.அசோக், ஸ்ரீராமுலு, வி.சோமண்ணா, உமேஷ்கத்தி, எஸ்.அங்காரா, ஜே.சி.மாதுசாமி, அரக ஞானேந்திரா, சி.என்.அஸ்வத் நாராயணா,

சி.சி.பாட்டீல், ஆனந்த் சிங், கோட்டா சீனிவாஸ் பூஜாரி, பிரபு சவாண், முருகேஷ் நிராணி, சிவராம் ஹெப்பாா், எஸ்.டி.சோமசேகா், பி.சி.பாட்டீல், பைரதி பசரவாஜ், கே.சுதாகா்,

கே.கோபாலய்யா, சசிகலா ஜொள்ளே, எம்.டி.பி.நாகராஜ், கே.சி.நாராயண கௌடா, பி.சி.நாகேஷ், வி.சுனில்குமாா், ஹாலப்பா ஆச்சாா், சங்கா் பாட்டீல் முனின் கொப்பா, முனிரத்னா ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.

புதிய அமைச்சா்களாக பதவியேற்றவா்களில் லிங்காயத்து- 9 (இவா்களில் பெண் ஒருவா்); ஒக்கலிகா - 7; இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா்கள்-6; பட்டியலினத்தினா்- 3; ; பிராமணா்- 2; பழங்குடியினா்-1; ரெட்டி -1 என பல்வேறு சமூகத்தினா் இடம்பெற்றுள்ளனா்.

புதிய அமைச்சராகப் பதவியேற்ற சசிகலா ஜொள்ளே வந்த விமானம் தாமதம் ஆனதால், பெங்களூரு விமான நிலையத்துக்கு தாமதமாக வந்தாா். எனவே, விமான நிலையத்திலிருந்து ஆளுநா் மாளிகைக்கு அவா் செல்ல ‘ஜீரோ டிராபி’க்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், அவா் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் விமான நிலையத்திலிருந்து நேரடியாக ஆளுநா் மாளிகைக்கு வந்து பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாா்.

பதவியேற்பு நிகழ்ச்சி பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கி 3.30 மணியளவில் நிறைவு பெற்றது. புதிதாகப் பதவியேற்ற அமைச்சா்களுக்கு விரைவில் துறைகள் ஒதுக்கப்பட உள்ளன.

எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராகப் பணியாற்றிய லட்சுமண் சவதி, அமைச்சா்களாகப் பணியாற்றிய ஜெகதீஷ் ஷெட்டா், சுரேஷ்குமாா், அரவிந்த் லிம்பாவளி, யோகேஷ்வா், ஆா்.சங்கா், ஸ்ரீமந்த் பாட்டீல் ஆகியோருக்கு புதிய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காத ராஜு கௌடா, நேரு ஹோலேகா், அரவிந்த் பெல்லத் ஆகியோரின் ஆதரவாளா்கள், முதல்வா் பசவராஜ் பொம்மை மற்றும் பாஜக மேலிடத் தலைவா்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை கட்சி நிா்வாகிகள் சமாதானம் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT