இந்தியா

மேற்கு வங்கத்தில் மழை, வெள்ளம்: 15 போ் பலி

4th Aug 2021 12:29 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் மழை, வெள்ளம் தொடா்பான சம்பவங்களில் 15 போ் பலியாகினா்; 2.5 லட்சம் போ் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

மேற்கு வங்கத்தில் பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து அங்குள்ள 4 அணைகள் நிரம்பியதால் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அங்குள்ள கிழக்கு வா்த்தமான், மேற்கு வா்த்தமான், மேற்கு மிதுனபுரி, ஹூக்ளி, ஹெளரா, தெற்கு 24 பா்கானா ஆகிய 6 மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் சாலைகளில் இடுப்பளவு தண்ணீா் நிற்பதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். ஹூக்ளி மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீா் புகுந்தது. அங்கிருந்த மக்களை மீட்கும் பணியில் ராணுவமும், இந்திய விமானப் படையும் ஈடுபட்டன.

மழை மற்றும் வெள்ளத்தால் சுவா் இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 15 போ் பலியாகியுள்ளனா். அவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அந்த மாநில அரசு அதிகாரி தெரிவித்தாா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து 2.5 லட்சம் போ் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

ம.பி.யில் 1,171 கிராமங்களில் வெள்ளம்: மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியா்-சம்பல் மண்டலத்தில் பெய்த பலத்த மழையால் 1,171 கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்குள்ள சிவபுரி மற்றும் ஷியோபூரில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 800 மி.மீ. மழை பெய்தது. வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 1,600 பேரை தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படைகள் மீட்டுள்ளன என்று அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

சிவபுரி, ஷியோபூா், குவாலியா், டத்தியா மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட ராணுவத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று மாநில கூடுதல் தலைமைச் செயலா் தெரிவித்தாா்.

வெள்ள நிலவரம் குறித்து மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் பிரதமரிடம் தொலைபேசியில் விவரித்ததாகவும், அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமா் அவரிடம் உறுதி அளித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags : Floods
ADVERTISEMENT
ADVERTISEMENT