இந்தியா

தனி நிதிநிலை அறிக்கையால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயருமா?

2nd Aug 2021 08:28 AM | ஆ.நங்கையார் மணி

ADVERTISEMENT

ளாண்மைத் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்குப் பின், வேளாண்மைத் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நிலையிலும் கருத்துகளை பெற்று வரும் தமிழக அரசு, விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை பரிசீலிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் சாகுபடி பரப்பு,  சாகுபடி திறன், உற்பத்தி திறன்  ஆகியவற்றை அதிகரித்து, தமிழகத்தின் உணவு உற்பத்தியை 125 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் கூடுதலாக உயர்த்த வேண்டும் என்பதை அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது. 
கடந்த 2020-21 நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைத் துறைக்கு சுமார் ரூ.17ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்த வருவாயில் 6.1 சதவீதம் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு செய்வதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தத் தொகையில் பெரும் பகுதி, விவசாயிகளுக்கான கடனுதவி, இலவச மின்சாரத்திற்கான கட்டணம், வேளாண் பல்கலைக்கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், வேளாண்மை கல்லூரிகளுக்கான சிறப்பு செலவினங்கள் தொடங்கி, சர்க்கரை ஆலைகளுக்கு இணைப்புச் சாலை அமைப்பது வரையிலும் செலவிடப்படுகிறது. இதனால் பயிர் மற்றும் பயிர் சார்ந்த பணிகளுக்கு குறைந்த அளவில் மட்டுமே நிதி ஒதுக்கீடு கிடைத்து வந்தது. 
தற்போது தமிழக அரசு வேளாண்மைத் துறைக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்ய முன் வந்துள்ள நிலையில், வேளாண் தொழிலை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தனியாகவும், இதர உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்கும் பயன் ஏற்படக்கூடும். 
100 நாள் வேலைத் திட்டத்தால் நலிவடையும் விவசாயம்: வேளாண்மை நிதி நிலை அறிக்கை தொடர்பாக விவசாயிகளின் கருத்துகளை பெறுவதற்கு அரசு மேற்கொண்டுள்ள முயற்சி வரவேற்க கூடியது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்த விவசாயிகளும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பயனாளிகளின் பணித் திறன்  குறித்து  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த போதிலும், வாக்கு வங்கியை பாதுகாக்கும் நோக்கில் அனைத்து அரசியல் கட்சிகளும் பாரபட்சமின்றி மௌனித்து வருகின்றன. 
கூலித் தொழிலாளர்கள் கிடைக்காமல் பல இடங்களில் மானாவாரி விவசாயம் நலிவடைந்து விட்டது. இயந்திர மயமாக்கல் ஒருபுறம் கைகொடுத்தாலும், சிறு குறு விவசாயிகள் அதன் மூலம் பலன் பெற முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு வேளாண் பணிகள் நடைபெறும் காலங்களில், 100 நாள் வேலைத் திட்டப் பணிகளை நிறுத்தி வைப்பதற்கு அரசு உத்தரவிட வேண்டும். இல்லாதபட்சத்தில், நன்செய் நிலங்களும் தரிசு நிலங்களாக மாறும் நிலை விரைவில் ஏற்படும். 
அதேபோல் அனைத்து விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார  விலை கிடைப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் விவசாயியான பாத்திமா ராஜரத்தினம். இவரது கருத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் பிரதிபலிக்கிறார்கள்.
விவசாயிகளின் வருவாய் உயர நடவடிக்கை தேவை: இது குறித்து ஓய்வு பெற்ற வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை, விதைச் சான்றளிப்புத் துறை, வேளாண் பல்கலை., கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். உணவு தானிய உற்பத்தியை 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழக அரசு, அதேபோல் விவசாயிகளின் வருமானம் உயரவும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 
நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை, வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒவ்வொரு தனி நபரும் பயன் பெறும் வகையில் பண்ணைக் கருவிகள், தரமான விதை, உரம் என பயிர் வளர்ச்சி மற்றும்  உற்பத்தித் திறன் சார்ந்து கிடைக்க வேண்டும். அலுவலகங்கள் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், கிடங்குகள் போன்ற நிரந்தர செலவினங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். 
112 உழவர் சந்தைகளை மேம்படுத்தவும், புதிதாக 120 உழவர் சந்தைகளை அமைக்கவும் திட்டமிட்டுள்ள அரசு, அவற்றுக்கான செலவினங்களை தனியாகப் பட்டியலிட வேண்டும். கடந்த காலங்களில் வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையிலிருந்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் தொடர் சங்கிலி விநியோக மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


 

Tags : farmers
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT