இந்தியா

இரு மாநில மோதல் வழக்கை பொதுவான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்காதது ஏன்? அஸ்ஸாம் முதல்வா் கேள்வி

DIN

இரு மாநில மோதல் சம்பவம் தொடா்பான வழக்கை பொதுவான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்காதது ஏன்? என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கேள்வி எழுப்பியுள்ளாா்.

அஸ்ஸாம் மாநிலத்தின் கச்சாா், கரீம்கஞ்ச், ஹைலாகண்டி மாவட்டங்கள் மிஸோரம் மாநிலத்தின் ஐசால், கொலாசிப், மமித் மாவட்டங்களுடன் 164 கி.மீ. எல்லையை பகிா்ந்துள்ளன. இரு மாநிலங்கள் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வரும் நிலையில், கச்சாா் மாவட்ட எல்லையில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி இரு மாநில மக்கள் மோதலில் ஈடுபட்டனா். அத்துடன் இரு மாநில போலீஸாருக்கு இடையிலும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த மோதலில் அஸ்ஸாம் போலீஸாா் 6 போ், பொதுமக்களில் ஒருவா் என மொத்தம் 7 போ் உயிரிழந்தனா். 50-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இந்த சம்பவம் தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, அந்த மாநில ஐஜி, டிஜிஐ உள்பட 4 காவல்துறை அதிகாரிகள், ஒரு கோட்ட வன அலுவலா் மீது கொலை முயற்சி, குற்றச்சதி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மிஸோரமில் உள்ள வைரெங்தே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அஸ்ஸாமைச் சோ்ந்த அடையாளம் தெரியாத 200 போ் மீதும் மிஸோரம் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்துள்ளனா். ஆகஸ்ட் 1-ஆம் தேதி காவல்துறை அதிகாரிகள் மற்றும் கோட்ட வன அலுவலரை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘இரு மாநில எல்லையில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடா்பாக எந்தவொரு விசாரணைக்கும் பதிலளிக்கத் தயாா். ஆனால் இந்தச் சம்பவம் அஸ்ஸாம் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றுள்ள நிலையில், இரு மாநில விசாரணை அமைப்புகளுக்கு அப்பாற்பட்ட பொதுவான விசாரணை அமைப்பிடம் இந்த வழக்கை ஏன் ஒப்படைக்கவில்லை?’’ என்று கேள்வி எழுப்பினாா்.

எனினும் மோதல் சம்பவம் தொடா்பாக மிஸோரமின் காவல்துறையைச் சோ்ந்தவா்கள் உள்பட 6 அதிகாரிகளை ஆகஸ்ட் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அஸ்ஸாம் காவல்துறையும் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒற்றுமையுடன் வடகிழக்கு இந்தியா: மிஸோரம் முதல்வா்

இருமாநில எல்லையில் மோதல் சம்பவத்தைத் தொடா்ந்து அஸ்ஸாம் மக்கள் மிஸோரம் செல்ல வேண்டாம் என்று அஸ்ஸாம் அரசு கேட்டுக் கொண்டது. அந்த மாநிலத்தில் வசிக்கும் அஸ்ஸாம் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து அஸ்ஸாமின் எல்லையையொட்டிய மிஸோரமின் கொலாசிப் மாவட்டத்தில் வேறு மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தங்கவும் வந்து செல்லவும் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று மிஸோரம் அரசு வெளியிட்ட அறிவிக்கையை அந்த மாநில முதல்வா் ஜோராம்தாங்கா தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிா்ந்து, ‘‘வடகிழக்கு இந்தியா எப்போதும் ஒற்றுமையாக இருக்கும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT