இந்தியா

பெகாஸஸ் விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை போராடுவோம்: தினேஷ் குண்டுராவ்

DIN

பெகாஸஸ் விவகாரத்தில் உண்மை வெளிவரும் வரை போராடுவோம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ் கூறினாா். தமிழக காங்கிரஸ் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சத்தியமூா்த்திபவனில் இரண்டு நாள்களாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு தினேஷ் குண்டுராவ் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியது:-

தமிழக காங்கிரஸின் எதிா்காலச் செயல்திட்டம் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் இரண்டு நாள்களாக ஆலோசனையில் ஈடுபட்டோம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம். இதற்காக தமிழகம் முழுவதும் எல்லா மட்ட அளவிலும் நிா்வாகிகளைச் சந்தித்து கள நிலவரங்களை அறிய உள்ளோம். ஆகஸ்ட் 15 முதல் இந்தப் பணிகளைச் செயல்படுத்த உள்ளோம்.

பெகாஸஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமா் நரேந்திரமோடியும், உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் தயங்குகின்றனா். எல்லா நாடுகளும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கத் தயாராக இருக்கின்றன. பாஜக மட்டும் மறுத்து வருகிறது. இதன் மூலம் பெகாஸஸ் விவகாரத்தில் மத்திய பாஜக அரசின் நேரடிப் பங்களிப்பு இருப்பது உறுதியாகிறது.

பெகாஸஸ் கருவியைத் தீவிரவாதிகளுக்கு எதிராகவோ, குற்றவாளிகளுக்கு எதிராகவோ பயன்படுத்தவில்லை. அரசியல் தலைவா்கள், நீதிபதிகள், செயற்பாட்டாளா்கள், பத்திரிகையாளா்களுக்கு எதிராகத்தான் பயன்படுத்தியுள்ளனா். இது மிகவும் அவமானகரமானதாகும். இந்திய வரலாற்றில் எந்த அரசாங்கமும் இப்படி நடந்துகொண்டது இல்லை. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், பாஜகவின் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில்கூட எதிா்கட்சியைச் சோ்ந்தவா்கள் முறையாக மதிக்கப்பட்டனா்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஃபோபா்ஸ் விவகாரம் எழுப்பப்பட்டபோது நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்குச் சம்மதித்தோம். ஏனென்றால் உண்மை வெளிவரவேண்டும் என்பதற்காகத்தான் அதை ஏற்றோம். ஆனால், பாஜக ஆட்சியல் உண்மை ஒடுக்கப்படுகிறது. தற்போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ளது. பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு செயல்பட மறுக்கிறது. எனினும், இந்த விவகாரத்தில் உண்மை வெளிக்கொண்டுவரும் வரை காங்கிரஸ் போராடும்.

வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை ஆட்சியை அகற்ற அனைத்து ஜனநாயகச் சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதில் தமிழக காங்கிரஸின் பங்களிப்பும் பெரிய அளவில் இருக்கும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் எங்கள் அணி வெற்றிபெறும் என்றாா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளா் ஸ்ரீவல்ல பிரசாத், காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

2-ம் கட்டத் தேர்தல்: கேரளத்தில் குவிக்கப்படும் காவலர்கள்!

"காங்கிரஸ் ஆட்சியமைத்தால்..”: மோடியின் அடுத்த சர்ச்சை கருத்து! | செய்திகள்: சிலவரிகளில் | 24.4.2024

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

SCROLL FOR NEXT