இந்தியா

கரோனாவும் ஏப்ரல் மாதமும்.. புள்ளி விவரம் சொல்லும் பயங்கரம்

29th Apr 2021 01:21 PM

ADVERTISEMENT

 

இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்திருக்கும் நிலையில், நாட்டின் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையில் 20 சதவீதம் இந்த ஏப்ரல் மாதத்தில்தான் நிகழ்ந்துள்ளது என்ற புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.

பலி எண்ணிக்கை என்று மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டாம், மொத்த பாதிப்பிலும், இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 58.47 லட்சம் பேருக்கு புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒட்டு மொத்த பாதிப்பான 1.83 கோடியில் 32 சதவீதமாகும்.

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,01,187 ஆக இருக்கும் நிலையில், இந்த ஏப்ரலில் மட்டும் 38,719 பேர் பலியாகியுள்ளனர்.

நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலி எண்ணிக்கை அதிகரித்து, இதுவரை காணாத வகையில் தகனமேடைகள் நாள் முழுக்க உடல்களை எரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதும் தில்லியில் ஒரு உடலை தகனம் செய்ய 20 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்கும் நிலையும் காணப்பட்டது.

அதுமட்டுமா, திறந்தவெளிகளில் எண்ணற்ற கரோனா நோயாளிகளின் உடல்களை எரிக்கும் மற்றும் புதைக்கும் புகைப்படங்களும் மக்களின் நெஞ்சங்களில் பெரும் வலிகளை ஏற்படுத்தியதும் இந்த மாதத்தில்தான். அதுமட்டுமா பல நகரங்களில் உடல்களை எரிக்கத் தேவையான கட்டைகள் தீர்ந்து போயின. 

இந்த புள்ளி விவரங்களே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன என்றால், கரோனா பதித்து உறுதி செய்யப்படாமல் வீடுகளில் இறக்கும், பல நோயாளிகளின் எண்ணிக்கையும் புள்ளி விவரத்தில் சேர்க்கப்பட்டால் நமக்கே மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடும் போல இருக்கும் என்கிறார்கள் களநிலவரத்தை நேரில் பார்ப்பவர்கள்.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஒரு நாள் பாதிப்பு 75 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அது மிக விரைவில் 1 லட்சம், பிறகு அடுத்த வாரத்திலேயே இரண்டு லட்சம் என உயர்ந்தது. அதோடு நின்றுவிடாமல், ஒரு வாரம் கூட ஆகவில்லை, வெறும் 6 நாள்களில் பாதிப்பு 3 லட்சத்தை எட்டிப்பிடித்தது.  தற்போது 4 லட்சத்தை நோக்கி நாள்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மிகவும் அச்சமூட்டும் வகையில், அமெரிக்காவில் உள்ள மெக்ஸிஜன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பராமர் முகர்ஜி, சில புள்ளி விவரங்களை ஆய்வு செய்து கூறுகையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு மே மாதம் மத்தியில் உச்சத்தைத் தொடும். அப்போது ஒரு நாள் பாதிப்பு 8 முதல் 10 லட்சமாக இருக்கும். பிறகு, கரோனா பாதிப்பு மெல்லக் குறையத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
 

Tags : april coronavirus vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT