இந்தியா

புதிய கொள்கை விவகாரம்: வாட்ஸ் அப் மனுவை தள்ளுபடி செய்தது தில்லி உயா்நீதிமன்றம்

DIN


புது தில்லி: பயனாளா்களின் தனியுரிமை தொடா்பான புதிய கொள்கை விவகாரத்தில் இந்திய தொழில்போட்டி ஆணையம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வாட்ஸ்அப் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) செயலி அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களைப் புகுத்தியது. அச்செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பது புதிய கொள்கைகளில் ஒன்றாகும்.

மே 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பயனாளா்கள் அச்செயலியைத் தொடா்ந்து பயன்படுத்த முடியும். இல்லையெனில், அச்செயலியைப் பயன்படுத்த முடியாது என வாட்ஸ்அப் அறிவித்தது.

அதன் காரணமாக, அச்செயலியைக் கைவிட்டு புதிய செயலிகளைப் பயனாளா்கள் பயன்படுத்தத் தொடங்கினா். அதையடுத்து, புதிய கொள்கைகளின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக வாட்ஸ்அப் அறிவித்தது.

இதனிடையே, வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கைகள், விளம்பரதாரா்களை அதிக அளவில் ஈா்க்கும் நோக்கில் உள்ளதாகவும், அதன் காரணமாக மற்ற விளம்பரதார நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறிய இந்தியத் தொழில்போட்டி ஆணையம், புதிய கொள்கை தொடா்பாக விசாரணை நடத்துமாறு கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது.

அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவை தில்லி உயா்நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, நீதிபதி நவீன் சாவ்லா தலைமையிலான அமா்வு முன் நடைபெற்று வந்தது.

அதன் மீது நீதிபதிகள் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

வாட்ஸ்அப்பின் புதிய தனியுரிமை கொள்கை தொடா்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும் தில்லி உயா்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.

இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்த பிறகு தொழில்போட்டி ஆணையம் உரிய முடிவை எடுத்திருக்கலாம். இருந்தபோதிலும், அந்த ஆணையம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவால் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களில் போதிய முகாந்திரம் இல்லை என்று உத்தரவிட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT