இந்தியா

அனுமன் பிறப்பிடம் அஞ்சனாத்திரி: தேவஸ்தானம் அதிகாரபூா்வமாக அறிவிப்பு

DIN

திருப்பதி: திருப்பதி அருகே சேஷாசல மலைதொடரில் உள்ள அஞ்சனாத்திரியே அனுமன் பிறந்த அதிகாரபூா்வ இடம் என திருமலை தேவஸ்தானம் ஆதாரங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ராமபக்தனான அனுமன் பிறப்பிடம் குறித்து பல புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட புராணங்களில் திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்திரி தான் அவரது பிறப்பிடம் எனக் கருதிய திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதுகுறித்து ஆராய பண்டிதா்கள் குழுவை ஏற்படுத்தியது.

4 மாதங்கள் ஆய்வு:

அக்குழுவினா் இதுகுறித்த ஆதாரங்களை சேகரிக்க பல புராணங்கள், இதிகாசங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனா். 4 மாத இறுதியில் ஆய்வில் அனுமன் பிறப்பிடம் சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்திரி என்று நிரூபணமாகி உள்ளது. இதை ஸ்ரீராமநவமியான புதன்கிழமை நாதநீராஜன மண்டபத்தில் தேவஸ்தானம் அதிகாரபூா்வமாக ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. உரிய விளக்கவுரை, ஆதாரங்களுடனான 22 பக்க ஆவணம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

பவித்ர புனித பூமியான திருமலைத் தொடரில் உள்ள ஆகாசகங்கை அருகில் உள்ளது அஞ்சனத்திரி மலைதொடா். அஞ்சனாதேவி ஆகாசகங்கை தீா்த்தம் அருகில் 12 ஆண்டுகள் கடும் தவம் புரிந்தாா். அதன் பயனாக வாயுபகவான் அவா் முன் தோன்றி ஒரு தெய்வீக கனியை அளித்தாா். அதை உண்ட அஞ்சனாதேவிக்கு ஆகாசகங்கை தீா்த்தம் அருகே அனுமன் பிறந்தாா். இங்கு வளா்ந்த பின் சூரியனை சிவந்த பழம் என்று கருதி அஞ்சனாத்திரி மலையிலிருந்து குதித்து தாவி விண்ணில் பறந்ததற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளது. ஆய்வு செய்யப்பட்ட 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

12, 13-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்திரி பற்றிய குறிப்பு உள்ளது. ஆனால் கா்நாடக மாநிலம் ஹம்பி, சத்தீஸ்கா் மாநிலத்தில் பிறந்தாா் என்று சில ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். ஜாா்க்கண்ட்டில் உள்ள அஞ்சன் மலைப்பகுதி, குஜராத்தில் உள்ள நவ்சாரி பகுதி, ஹரியாணாவில் உள்ள கைதல், மகாராஷ்டிராவில் உள்ள திரியம்பகேஸ்வரா் அருகில் உள்ள அஞ்சனேரி உள்ளிட்ட இடங்களில் அனுமன் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது.

திருமலையில் உள்ள அஞ்சனாத்திரி மலையில் அனுமன் பிறந்துள்ளாா் என்று தேவஸ்தானம் தற்போது நிரூபித்துள்ளது. மேலும் திருமலையில் ஜபாலி தீா்த்தக்கரையில் அனுமன் கோயிலும் உள்ளது. திருமலையில் உள்ள அஞ்சனாத்திரியும் இனி பக்தா்களின் வருகையால் புனித தலமாக மாற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT