இந்தியா

கரோனா தொற்றை எதிர்கொள்வதில் மத்திய அரசு தோல்வி: பிரியங்கா குற்றச்சாட்டு

DIN

புது தில்லி: கரோனா 2ஆவது அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசு மோசமான தோல்வியடைந்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் பிரியங்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிடிஐ நிறுவனத்துக்கு அவர் புதன்கிழமை அளித்த பிரத்யேக பேட்டி:  நாடு நெருக்கடியில் உள்ளது, ஒவ்வோர் உயிரும் முக்கியமானது என்பதைக் கருத்தில்கொண்டு, எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளைப் புறக்கணிக்காமல், அரசியலைப் புறந்தள்ளி அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். 
கரோனா தொற்றைக் கையாள்வது தொடர்பான பரிந்துரைகளுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு சில நாள்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தார். ஆக்கபூர்வமான அந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்காமல், அந்தக் கடிதத்துக்கு பதிலளிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர். மத்திய அரசின் அறிக்கைகள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளையே குறிவைக்கின்றன.
உலகிலேயே இந்தியாதான் அதிகளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது. அதற்காக 70 ஆண்டுகால முன்னோக்கு சிந்தனைகொண்ட ஆளுமைகளுக்கு நன்றி. மத்திய அரசு கடந்த ஜனவரி - மார்ச் இடையே 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. ஆனால், இதே காலகட்டத்தில், இந்திய மக்களுக்கு 3 கோடி முதல் 4 கோடி தடுப்பூசிகளே கிடைத்தன. மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ஏன் முதலில் முன்னுரிமை வழங்கவில்லை? பிரதமர் ஏன் சுயவிளம்பரம் செய்துகொள்கிறார்? 22 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசம் போன்ற மாநிலத்தில், 1 கோடி அளவுக்கே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மோடி அரசின் தொலைநோக்கில்லா செயல்பாட்டின் காரணமாகவே, இந்தியா தடுப்பூசி இறக்குமதியாளராக வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இப்போதும்கூட, அவர்களது தடுப்பூசிக் கொள்கை குறைபாடுடையது, பாரபட்சமாகத்தான் உள்ளது.
18 முதல் 45 வயதானவர்களுக்கு ஏன் இலவச தடுப்பூசிகள் கிடைக்கவில்லை? விலையைக் கட்டுக்குள் கொண்டுவராமல் இடைத்தரகர்களை அரசு ஏன் அனுமதிக்கிறது? இது நல்ல உத்தி அல்ல; மோசமான தோல்வி.
மாநிலங்கள் ஆக்சிஜன் தேவையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது, இந்த அரசின் மனிதத் தன்மையற்ற கருத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
இந்தியா ஒரு நாளைக்கு 7,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது. ஆனால், நாடு முழுவதும் அதை வழங்குவதற்குப் போதுமான தளவாடங்களை அரசு உருவாக்கவில்லை. கடந்த 12 மாதங்களில் சுமார் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழும் மரணங்களுக்கு யார் காரணம்?
இந்த கரோனா கால நெருக்கடியின்போதும் நாட்டு மக்களுக்கு ஆதரவாகவும், ஆக்கபூர்வமாகவும் இருக்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியுடன் உள்ளது. தேசத்தின் மீதான எங்களது பொறுப்பை முழுமையாக புரிந்துகொள்கிறோம். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மத்திய அரசுக்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பையே தொடர்ந்து வழங்கிவருகின்றனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாமரையை ஒரு முறை அழுத்தினால் 2 வாக்கு: விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசுமை வாக்குப்பதிவு மையங்கள்!

மரணமடைந்தவரை வங்கிக்குக் கூட்டி வந்து கடன் பெற முயன்ற பெண்

வேண்டுமென்றே சர்க்கரையின் அளவை கூட்டுகிறார் கேஜரிவால்: அமலாக்கத்துறை

காதல் தோல்வியால் தற்கொலை- பெண் பொறுப்பு கிடையாது: உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT