இந்தியா

கரோனா: ஒரே நாளில் 2,023 பேர் பலி; 2.95 லட்சம் பேர் பாதிப்பு

DIN


புதுதில்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை புதன்கிழமை ஒரே நாளில் 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதன்மூலம் நாட்டில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கரோனா தீநுண்மித் தொற்றால் புதன்கிழமை ஒரே நாளில் 2,023 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,553-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,95,041-ஆக உயர்ந்தது. அதேசமயம் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் 42ஆவது நாளான புதன்கிழமை சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 21,57,538-ஆக உயர்ந்தது. இது மொத்த பாதிப்பில் 13.82 சதவீதமாகும். கரோனா தொற்றுக்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85.01 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதுவரை இத்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 1,32,76,039-ஆக உள்ளது. அதேவேளையில் இறப்பு விகிதம் 1.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ஆம் தேதி 70 லட்சத்தையும், டிசம்பர் மாதம் 1 கோடியையும் தொட்டது. ஏப்ரல் 19-ஆம் தேதி இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.50 கோடியைக் கடந்தது.

27.1 கோடி மக்களுக்கு பரிசோதனை: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு அறிக்கையின்படி கடந்த செவ்வாய்க்கிழமை 16,39,357 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்துடன் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நாட்டில் மொத்தம் 27,10,53,392 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இத்தொற்றால் புதிதாக 2,023 பேர் இறந்துள்ளனர். 

அவர்களில் மகாராஷ்டிரத்தில் 519, தில்லியில் 277, சத்தீஸ்கரில் 191, உத்தரபிரதேசத்தில் 162, கர்நாடகத்தில் 149, குஜராத்தில் 121, மத்தியபிரதேசத்தில் 77, ராஜஸ்தானில் 64, பஞ்சாபில் 60, பிகாரில் 51, தமிழகத்தில் 48, மேற்குவங்கத்தில் 46, ஜார்க்கண்டில் 45, ஹரியாணாவில் 35, ஆந்திரபிரதேசத்தில் 35 பேர் இறந்துள்ளனர்.

நாட்டில் கரோனா தொற்றுக்கு இதுவரை மொத்தம் 1,82,553 பேர் இறந்துள்ளனர். அவர்களில் மகாராஷ்டிரத்தில் 61,343, கர்நாடகத்தில் 13,646, தமிழகத்தில் 13,205, தில்லியில் 12,638, மேற்குவங்கத்தில் 10,652, உத்தரபிரதேசத்தில் 10,159, பஞ்சாபில் 8,045, ஆந்திரபிரதேசத்தில் 7,472 பேர் அடங்குவர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

76% பேர் 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்

நாட்டில் புதன்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 2,95,041 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மொத்தம் 76 சதவீதம் பேர் உத்தரபிரதேசம், தில்லி, ராஜஸ்தான் உள்பட 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக தினசரி பாதிப்பாக 62,097 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் 29,574 பேர், தில்லியில் 28,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தவிர கர்நாடகம், குஜராத், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் இப்பட்டியலில் உள்ளன.

நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21,57,538 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 13.82 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் இத்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,25,561 ஆக உள்ளது.

நாட்டில் சிகிச்சை பெறுவோர்களில் ஒட்டுமொத்தமாக 60.86 சதவீதத்தினர் மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இத்தொற்றுக்குக் கடந்த ஒரு நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,67,457 பேராக உள்ள நிலையில், ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,32,76,039-ஆக உள்ளது. நாட்டில் இறப்பு விகிதம் 1.17 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இத்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,023 ஆக உள்ளது. இதில் 82.6 சதவீதம் பேர் பத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஒரே நாளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

:தமிழகத்தில் புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 11 ஆயிரத்து 681 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:  

தமிழகத்தில் புதன்கிழமை மட்டும் 1 லட்சத்து 10,304 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 11,681 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இதன் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை கரோனாவால்  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 25 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.  தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 6,18,809 பேர். பெண்கள் 4,06,214 பேர். மூன்றாம் பாலினத்தவர் 35 பேர். 

சென்னையில் புதன்கிழமை 3,750 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 94 ஆயிரத்து 073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளையில் தமிழகத்தில் புதன்கிழமை 7,071 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.  இதன் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 27,440 ஆக அதிகரித்துள்ளது.  புதன்கிழமை வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 70 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்து 4,292 ஆகும். 

53 பேர் உயிரிழப்பு: சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 7,931 பேருக்குத் தொற்று உள்ளது.  தனிமைப்படுத்துதலில் 84,361 பேர் உள்ளனர்.  கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் புதன்கிழமை  53 பேர் உயிரிழந்தனர்.  அதில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 21 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இதன் மூலம் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,258 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டும் மொத்தம் 4,450 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்னையாக சுவாசப் பிரச்னை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. புதன்கிழமை உயிரிழந்தவர்களில் 50 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 3 பேர் ஆவர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT