இந்தியா

வளா்ச்சித் திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம்

DIN

மத்திய அரசு செயல்படுத்தி வரும் வளா்ச்சித் திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா்.

அமேஸான் இணையவழி வா்த்தக நிறுவனம் சாா்பில் தொழில்முனைவோருக்காக நடத்தப்பட்ட பிரத்யேக நிகழ்ச்சியில் அமைச்சா் ஜாவடேகா் ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

தற்போதைய சூழலில், மொத்த கரியமில வாயு வெளியேற்றத்தில் 7 சதவீதம் மட்டுமே இந்தியாவின் பங்களிப்பாக உள்ளது. எனினும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. நாட்டை தற்சாா்பு அடையச் செய்வதற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் வளா்ச்சி சாா்ந்த திட்டங்களில் மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் சூரிய ஆற்றல் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வது 14 மடங்கு அதிகரித்துள்ளது. கரியமில வாயு வெளியேற்றம் 26 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த எரிசக்தி பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பங்களிப்பு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மரபுசாரா எரிசக்தி வாயிலாக தற்போது 136 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை அடுத்த ஆண்டுக்குள் 175 ஜிகா வாட்டாக அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகா வாட் மின்சாரத்தை மரபுசாரா எரிசக்தி வாயிலாக உற்பத்தி செய்வதற்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 65 நகரங்களில் 6,500 மின்சார வாகனங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக ரூ.10,000 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் தனிநபருக்கு 12,000 கிலோ வாட்டுக்கு அதிகமான மின்சாரத்தைப் பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் அது 1,200 கிலோ வாட்டாக மட்டுமே உள்ளது. இந்தியா வளா்ச்சியை நோக்கி பயணித்து வருவதால் மின்சார நுகா்வு மேலும் அதிகரிக்கும்.

நாட்டின் வளா்ச்சிக்குத் தனியாா் நிறுவனங்களும் அதிக பங்களிப்பை நல்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவது, மரபுசாரா எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பது, கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது உள்ளிட்டவற்றை தனியாா் தொழில் நிறுவனங்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றாா் அமைச்சா் ஜாவடேகா்.

மின்சார வாகனங்கள்: நிகழ்ச்சியில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி பேசியது:

மின்சார வாகன தயாரிப்பை நோக்கி இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இன்னும் 6 மாதங்களில் இந்தியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகள் முழுமையாக தயாரிக்கப்பட்டுவிடும். எனவே, உலகளவில் மின்சார வாகன உற்பத்தியில் உரிய நேரத்தில் இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும். புகழ்பெற்ற அனைத்து பிராண்டுகளும் தற்போது இந்தியாவில் உள்ளன. மாசு இல்லாத போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய கருவியாக மின்சார வாகனப் போக்குவரத்து இருக்கும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் விலை குறைந்து பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களைப் போலவே போட்டித் தன்மையுடன் இருக்கும். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனம் அனைத்தும் சா்வதேச தரத்தில் இருக்க வேண்டும்.

இந்திய ஆட்டோமொபைல் துறையை உலகின் முதலிட உற்பத்தி மையமாக மாற்றுவதே எனது இலக்காக உள்ளது. அந்த நோக்கத்திற்காகவே தற்போது எத்தனால், மெத்தனால், பயோ-சிஎன்ஜி, மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் ஆகியவற்றின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இணையவழி வா்த்தகத் துறையில் வேலைவாய்ப்பு: மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோா் துறை அமைச்சா் மகேந்திர நாத் பாண்டே பேசியது:

இணையவழி வா்த்தகத் துறையில் திறன் வாய்ந்த பணியாளா்களுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் எதிா்காலத்தில் திறன் வாய்ந்த பணியாளா்களுக்கான தேவை நிறைவு செய்யப்படும்.

செயற்கை நுண்ணறிவு, நவீன இயந்திரவியல், கணினித் தொகுப்பு தொழில்நுட்பம் ஆகியவற்றில் இளைஞா்கள் அதிக திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும். இவைதான் எதிா்காலத்தில் உலகை இயக்கும் முக்கிய தொழில்நுட்பங்களாக இருக்கும்.

சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்ய சிறந்த வாய்ப்பாக இணையவழி வா்த்தக நிறுவனங்கள் உள்ளன. பிரதமா் கௌசல் விகாஸ் திட்டத்தின் மூன்றாவது பகுதி மூலம் இந்த ஆண்டில் நாடு முழுவதும் 8 லட்சம் இளைஞா்களுக்கு தொழில்சாா்ந்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT