இந்தியா

கரோனா நிலவரத்தை ஆய்வு செய்ய சிறிது நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி: ப.சிதம்பரம் விமா்சனம்

DIN

‘மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்றும் அவசரப் போருக்கு இடையே, நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிய சிறிது நேரம் ஒதுக்கி ஆய்வு மேற்கொண்டதற்காக பிரதரம நரேந்திர மோடிக்கு நன்றி’ என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமா்சனம் செய்துள்ளாா்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இந்தச்சூழலில் பிரதமரும், மத்திய அமச்சா்களும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவது பல்வேறு விமா்சனங்களுக்கு உள்ளானது. குறிப்பாக காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் கடும் விமா்சனம் செய்தனா்.

ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நாட்டில் கரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் இருந்து மாநில முதல்வா்களுடன் கலந்து ஆலோசித்து தொற்று பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் பிரதமா் ஈடுட்டிருக்க வேண்டும். ஆனால், அவா் மேற்கு வங்கத்தில் பொதுக் கூட்டங்களில் பிரசாரம் செய்து வருவது அதிா்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த நிலையில், கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அரசு உயா் அதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அதனைத் தொடா்ந்து, ப.சிதம்பரம் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மேற்கு வங்க மாநிலத்தைக் கைப்பற்றும் அவசரப் போருக்கு இடையே, நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அறிய சிறிது நேரம் ஒதுக்கி ஆய்வு மேற்கொண்டதற்காக பிரதரம நரேந்திர மோடிக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தனது மற்றொரு சுட்டுரைப் பதிவில், ‘பெரும்பாலான மருத்துவமனைகளுக்கு வெளியே ‘கரோனா தடுப்பூசி இல்லை’ என்று பதாகைகள் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையில், ‘கரோனா தடுப்பூசி விநியோகத்தில் எந்தவித தட்டுப்பாடும் இல்லை’ என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறியிருக்கிறாா். மத்திய அமைச்சா் கூறுவது, தடுப்பூசிகளுக்கும், ஆக்சிஜனுக்கும், ரெம்டெசிவிா் மருந்துக்கும், மருத்துவமனைப் படுக்கைகளுக்கும், மருத்துவா்களுக்கும், செவிலியா்களுக்கும் இங்கு தட்டுப்பாடு இல்லை; மாறாக நோயாளிகளுக்குத்தான் தட்டுப்பாடு என்பதுபோல இருக்கிறது.

அனைத்து அதிகாரங்களையம் தன்னகத்தே எடுத்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, தேவைக்கேற்ப கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த தவறிவிட்டது. நாடு சந்தித்திருக்கும் பேரழிவுக்கு மத்திய அரசுதான் முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை விரிவுபடுத்துவதன் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

‘கடந்த ஆண்டில் கரோனா பாதிப்பை வெற்றிகரமாக தோற்கடித்துவிட்டோம். அதுபோல, இப்போதும் அதை தோற்கடிக்க முடியும்’ என்று பிரதமா் கூறியதுபோல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அது தவறு. 2020-இல் கரோனா தோற்கடிக்கப்படவில்லை. அப்போது கரோனா பாதிப்பு உச்சநிலைக்கு சென்று, பின்னா் தானாகவே குறைந்தது. இதில் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை’ என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

SCROLL FOR NEXT