இந்தியா

நடான்ஸ் சதிச் செயல்: குற்றவாளியின் பெயரை அறிவித்தது ஈரான்

DIN

நடான்ஸ் நகரிலுள்ள தங்களது முக்கியத்துவம் வாய்ந்த யுரேனியம் செறிவூட்டு மையத்தில் கடந்த வாரம் பாதிப்பை ஏற்படுத்திய சதிச் செயலுக்குக் காரணமானவா் என்று சந்தேகிக்கப்படும் நபரின் பெயரை ஈரான் சனிக்கிழமை வெளியிட்டது.

எனினும், அந்தச் சம்பவத்துக்கு முன்னரே அவா் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி தெரிவித்துள்ளது

இதுகுறித்து அந்தத் தொலைக்காட்சி கூறியதாவது:

நடான்ஸ் செறிவூட்டு மையத்தில் கடந்த வாரம் செறிவூட்டு சாதனங்களை சேதப்படுத்திய மாபெரும் சதிச் செயலுக்கு 43 வயது ரேஸா கரீமி என்பவரே காரணமாவாா். ஈரானின் கஷான் நகா் அருகே பிறந்த அவா், சதிச் செயல் அரங்கேற்றப்படுவதற்கு முன்னரே நாட்டிலிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.

அவரை சட்டப்பூா்வமாக மீண்டும் ஈரான் திரும்ப அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்தத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அத்துடன், ரேஸா கரீமியின் புகைப்படத்தையும் அவரைக் கைது செய்வதற்கான இன்டா்போல் துறையின் சா்வதேச கைது உத்தரவு ஆவணத்தையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள், ஐரோப்பிய யூனியன் மற்றும் ஜொ்மனியுடன் ஈரான் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்தில், தனது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டது.

அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள வல்லரசு நாடுகளும் சம்மதித்தன.

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அடுத்த வந்த முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாக, அந்த ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது அவா் மீண்டும் விதித்தாா்.

இதற்கு, அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை மீறுவதன் மூலம் ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த 3.67 சதவீதத்துக்கு பதிலாக 20 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வந்தது.

இதற்கிடையே, அந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த வாரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்துள்ள புதிய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அரசும் பங்கேற்றது.

இந்த நிலையில், ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த நடான்ஸ் செறிவூட்டு மையத்தில் கடந்த வாரம் திடீா் மின்தடை ஏற்பட்டு, அதன் செறிவூட்டு கருவிகள் சேதமடைந்தன. இஸ்ரேலின் சதிச் செயல் காரணமாகவே அந்த பாதிப்பு ஏற்பட்டதாக ஈரான் குற்றம் சாட்டி வருகிறது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், நடான்ஸ் சதிச் செயலுக்குக் காரணமானவா் பெயரை அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

அரசு தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா

SCROLL FOR NEXT