இந்தியா

'மருத்துவமனைகளில் ஆக்சிஜனை வீணாக்காமல் பயன்படுத்த வேண்டும்'

DIN


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் ஆக்சிஜனை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அத்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோா் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக அவா்களுக்குத் தேவையான செயற்கை ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

முக்கியமாக, கரோனா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்படுவோருக்கு செயற்கை ஆக்சிஜன் மூலமே சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் செயற்கை ஆக்சிஜன் உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த இரு நாள்களாக நாட்டில் முழு கொள்ளளவுக்கு செயற்கை ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், நாட்டில் செயற்கை ஆக்சிஜன் போதுமான அளவுக்கு உள்ளது. அதில் எந்தவித தட்டுப்பாடும் நிலவவில்லை.

அதே வேளையில், மருத்துவமனைகளில் செயற்கை ஆக்சிஜனை வீணாக்காமல் முறையாகப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டா்களின் எண்ணிக்கை, தேவை ஆகியவற்றைக் கணக்கெடுத்து, ஆக்சிஜனை விநியோகிப்பதற்காகக் கட்டுப்பாட்டு அறைகளை அமைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விநியோகம் அதிகரிப்பு: கரோனா தொற்று பாதிப்பு அதிகமாகக் காணப்படும் மாநிலங்களுக்கு ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் தொழிலக-உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை, மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள், பெட்ரோலியம்-வெடிபொருள்கள் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

நாட்டில் நாளொன்றுக்கு 7,127 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. கடந்த 12-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் ஆக்சிஜன் தேவை 3,842 மெட்ரிக் டன்னாக இருந்தது. மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், கா்நாடகம், தமிழகம், தில்லி, சத்தீஸ்கா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயற்கை ஆக்சிஜன் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகிறது.

50,000 மெட்ரிக் டன் கையிருப்பு: தற்போதைய சூழலில், நாட்டில் 50,000 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாக செயற்கை ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. அவசியம் ஏற்பட்டால் தொழிற்சாலைகளில் உள்ள செயற்கை ஆக்சிஜனை மருத்துவமனைகளில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT