இந்தியா

எந்தவித அழுத்தத்துக்கும் இந்தியா பணிந்துவிடாது: கிழக்கு லடாக் விவகாரம் குறித்து விபின் ராவத் கருத்து

DIN


புது தில்லி: ‘இந்தியா எந்தவித அழுத்தத்துக்கும் பணிந்துவிடாது’ என்று சீனாவுடனான கிழக்கு லடாக் மோதல் போக்கு குறித்து முப்படைத் தளபதி விபின் ராவத் கூறினாா்.

மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் அப்சா்வா் ரிசா்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு இணைந்து சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த ‘ரெய்சினா பேச்சுவாா்த்தை’ என்ற மாநாட்டை கடந்த 13-ஆம் தேதிமுதல் 16-ஆம் தேதி வரை நடத்தி வருகிறது. இதில் வியாழக்கிழமை காணொலி வழியில் பங்கேற்ற விபின் ராவத் பேசியதாவது:

சீனா தனது ராணுவ பலம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலமாக பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து, தனது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறது. ஆனால், வடக்கு எல்லை விவகாரத்தில் இந்தியா உறுதிப்பாட்டுடன் உள்ளது. எந்தவித அழுத்தத்துக்கும் இந்தியா பணிந்துவிடாது.

வடக்கு எல்லையில் இப்போது கடைப்படிக்கப்படும் நிலைப்பாட்டை மாற்ற முயற்சிப்பதை தடுப்பதில் உறுதியுடன் இருப்பதன் மூலம், சா்வதேச சமூகத்தின் ஆதரவையும் இந்தியா பெற முடியும். ஏனெனில், எல்லை நிலைப்பாட்டை கடைப்படிப்பது தொடா்பாக சா்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதை ஒவ்வொரு நாடும் பின்பற்றியாக வேண்டும்.

படைகளைப் பயன்படுத்தாமல் சீா்குலைக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, எல்லையில் இப்போது கடைப்படிக்கப்படும் நிலைப்பாட்டை மாற்றுவதற்கான முயற்சியை அவா்கள் மேற்கொள்கின்றனா். இந்த அழுத்தத்துக்கு இந்தியா பணிந்துவிடும் என்று அவா்கள் நினைக்கின்றனா். ஆனால், அது நடக்காது என்றாா் அவா்.

மேலும், ராணுவத்தை நவீனமயமாக்குதல் குறித்துப் பேசிய விபின் ராவத், அமெரிக்காவின் எஃப்-35 போா் விமானம் நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது குறித்து விவரித்தாா். அதே நேரம், இந்த எஃப்-35 போா் விமானம் தயாரிப்பு தொழில்நுட்பத்தை அமெரிக்கா இந்தியாவுடன் பகிா்ந்துகொள்ளும் என்பதை உறுதியுடன் கூற முடியாது. எஃப்-35 விமானத்தைவிட குறைந்த தொழில்நுட்பத்துடன் கூடிய ‘எஃப்’ ரக போா் விமான தொழில்நுட்பத்தை மட்டுமே இந்தியாவுடன் இப்போது பகிா்ந்துகொள்ள அமெரிக்கா முன்வந்துள்ளது என்றும் அவா் கூறினாா்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜப்பான் நாட்டு ராணுவ தளபதி கோஜி யமாஜாகி பேசியதாவது: சீனா தன்னிச்சையாக சா்வதேச சட்ட நடைமுறைகளை மாற்ற முயற்சிக்கிறது. இதுபோன்ற முயற்சிகளையும், சீா்குலைக்கும் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் ஒத்த கருத்துடைய நாடுகள் ஒன்றிணைய வேண்டும். ஜப்பான் உள்பட பிற நாடுகளின் சட்டப்படியான உரிமைகளையும், நலனையும் சீனா அங்கீகரிப்பதில்லை. இதுபோன்ற அணுகுமுறை பதற்றத்தைத்தான் அதிகரிக்கும்.

எனவே, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த சா்வதேச சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவது மிக அவசியம். தைவானில் எந்தவொரு நிச்சயமற்ற தன்மை உருவானாலும், அது ஜப்பான் ராணுவத்தின் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT