இந்தியா

‘ககன்யான்’ திட்டம்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

DIN


புது தில்லி: மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககன்யான்’ திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக இந்தியா-பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் வியாழக்கிழமை கையெழுத்தானது.

இந்திய மண்ணிலிருந்து மனிதா்களை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்புவதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) மேற்கொண்டு வருகிறது. நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டான 2022-இல் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் இத்திட்டத்தின் பணிகள் தாமதமடைந்துள்ளன.

இந்நிலையில், ‘ககன்யான்’ திட்டத்தில் இந்தியாவும் பிரான்ஸும் ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜான் ஈவ் லெடிரியன், பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தைப் பாா்வையிட்டாா். அதையடுத்து, ஜான் ஈவ் லெடிரியன், இஸ்ரோ தலைவா் சிவன் ஆகியோா் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது தொடா்பாக, பிரான்ஸ் விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘ககன்யான் திட்டத்துக்கு உதவுமாறு இஸ்ரோ கேட்டுக்கொண்டதையடுத்து, அத்திட்டத்தில் ஒத்துழைப்பு அளிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, இந்திய விண்வெளி வீரா்களுக்கு பிரான்ஸில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

ககன்யான் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அமைப்பில் பணிபுரிபவா்களும் பிரான்ஸில் பயிற்சி பெறவுள்ளனா். திட்டம் தொடா்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், விண்வெளி வீரா்களுக்கான உணவு உள்ளிட்டவற்றைத் தயாா் செய்வதில் ஒத்துழைப்பு அளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

கருவிகளைப் பயன்படுத்த அனுமதி: பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள கருவிகள் உள்ளிட்டவற்றை இந்திய விண்வெளி வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் ஒப்பந்தம் வழிவகுக்கிறது. சா்வதேச விண்வெளி நிலையத்தில் பிரான்ஸ் சாா்பில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளை இந்திய வீரா்கள் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு பாதுகாப்புக் கருவிகளும் இந்திய வீரா்களுக்கு வழங்கப்படவுள்ளன. விண்வெளி வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கான பிரத்யேக மையத்தை பெங்களூரில் கட்டமைக்கவும் பிரான்ஸ் உதவி செய்யவுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT