இந்தியா

இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

DIN

‘இந்தியாவில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை; மாறாக, அவற்றை முறையாக விநியோகிப்பதற்கு திட்டமிடுவதில்தான் பிரச்னை உள்ளது’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம் ஆகியவை தொடா்பாக, மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண், நீதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினா் வி.கே.பால் ஆகியோா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தனா். அப்போது ராஜேஷ் பூஷண் கூறியதாவது:

அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதுவரை 13.10 கோடி (13,10,90,370) கரோனா தடுப்பூசியை பெற்றுள்ளன. அவற்றில், 11.43 கோடி (11,43,69,677) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில், வீணான தடுப்பூசிகளும் அடங்கும்.

செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 1.67 கோடி (1,67,20,693) தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மேலும் 2.01 கோடி (2,01,22,960) தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.

இதிலிருந்து நாட்டில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால், அதை விநியோகிப்பதற்கு திட்டமிடுவதில்தான் பிரச்னை நிலவுகிறது.

பெரிய மாநிலங்களுக்கு 4 நாள்களுக்கு ஒருமுறையும் சிறிய மாநிலங்களுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறையும் கரோனா தடுப்பூசிகளை அனுப்பி வருகிறோம்.

ஒரு மாநிலத்தில், ஒரு மாவட்டத்தில் அதிக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கலாம். மற்றொரு மாவட்டத்தில் குறைவான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கலாம். இதை மாநில அரசுகள் சரியான முறையில் கையாண்டு, பயன்படுத்தப்படாமல் இருக்கும் தடுப்பூசிகளை தேவையேற்படும் இடங்களுக்கு அனுப்பிவைத்து, தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

சில மாநிலங்கள் 8-9 சதவீதம் வரை தடுப்பூசிகளை வீணாக்குகின்றன. கேரளத்தில் ஒரு தடுப்பூசிகூட வீணாக்கப்படவில்லை.

முந்தைய அளவைக் காட்டிலும் கரோனா தொற்று அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது. 53 மத்திய சுகாதாரக் குழுக்ககள், 53 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன என்றாா் அவா்.

நீதி ஆயோக் உறுப்பினா் வி.கே.பால் பேசுகையில், ‘சில மாநிலங்களில் கரோனா தொற்றுப் பரவல் மோசமான நிலையை எட்டியிருப்பதால், பரிசோதனை, தொடா்பறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்திக் கொள்வது உள்ளிட்ட தடுப்பு முறைகளைக் கையாளுதல் போன்றவற்றில் தொடா்ந்து கவனம் செலுத்தப்பட வேண்டும்’ என்றாா்.

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கடந்த ஜன. 16-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. முன்களப் பணியாளா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோா், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இப்பணியை தீவிரப்படுத்தும் வகையில் ஏப். 11 முதல் 14-ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா கடைப்பிடிக்கப்படும் என பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தாா். இதற்கிடையே, தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சில மாநில அரசுகள் தெரிவித்திருந்த நிலையில் மேற்கண்ட விளக்கத்தை மத்திய அரசு அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT