இந்தியா

மறைமுக வரி வருவாய் 12% வளர்ச்சி

14th Apr 2021 03:36 AM |  நமது சிறப்பு நிருபர்

ADVERTISEMENT

2020-21-ஆம் நிதியாண்டில் மறைமுக வரி (ஜிஎஸ்டி மற்றும் இதரவரிகள்) வசூல் 12.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:
 கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மறைமுக வரி வசூல் ரூ.9.54 லட்சம் கோடியாக இருந்தது. இதைத் தொடர்ந்து, 2020-21-ஆம் நிதியாண்டில் திருத்தப்பட்ட மறு மதிப்பீட்டின்படி, நிகர மறைமுக வரி ரூ. 10.71 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 12 சதவீதம் அதிகமாகும்.
 இதில், சுங்க வரி 21 சதவீதம் அதிகரித்து ரூ. 1.32 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. முந்தைய 2019-20-இல் சுங்க வரி ரூ.1.09 லட்சம் கோடி வசூலானது. இதேபோன்று மத்திய கலால், சேவை வரி வசூல் 59 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா நோய்த்தொற்றுக்கிடையே, இந்தச் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த 2020-21-ஆம் நிதியாண்டில் கலால் சேவை வரி ரூ.3.91 லட்சம் கோடி வசூலானது. முந்தைய ஆண்டில் இது ரூ.2.45 லட்சம் கோடியாக இருந்தது.
 மத்திய சரக்கு சேவை வரி (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி (ஐஜிஎஸ்டி) போன்றவை மூலம் 2021-21-ஆம் நிதியாண்டில் ரூ.5.48 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக வரி வசூலில் 8 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முந்தைய ஆண்டில் இது ரூ. 5.99 லட்சம் கோடியாக இருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால், அரசின் பல்வேறு முயற்சிகளினால் பிந்தைய அரையாண்டில் ஜிஎஸ்டி வரி வசூலில் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டி முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் ஜிஎஸ்டி வரி ரூ. 1.24 லட்சம் கோடி வசூலாகியுள்ளது என்று நிதிமைச்சகம் தெரிவித்துள்ளது.
 இதுதொடர்பாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி வாரியத் தலைவர் அஜித் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கரோனா 2-ஆவது அலையால் அரசின் வரி வருவாய் பாதிக்காது. நடப்பு ஏப்ரலிலும் இதுவரை வரி வருவாய் சிறப்பாகவே உள்ளது. எதிர்காலத்திலும் இதே நிலை தொடரும் என எதிர்பார்க்கிறோம்' என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT