இந்தியா

மேற்கு வங்கம்: பாஜக தலைவா் ராகுல் சின்ஹா இரு நாள்கள் பிரசாரம் மேற்கொள்ள தடை

DIN

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவா் ராகுல் சின்ஹா இரு நாள்களுக்கு தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்று தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தடை விதித்தது.

மேற்கு வங்கத்தில் தோ்தல் வன்முறையின்போது துணை ராணுவப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசிய அவா், ‘மத்திய துணை ராணுவத்தினா் 4 பேருக்கு பதிலாக 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்’ என்று கூறியது சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராகுல் சின்ஹா பிரசாரம் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 4-ஆம் கட்டத் தோ்தலின்போது வன்முறை ஏற்பட்டது. கூச்பிஹாா் மாவட்டத்தின் சிதால்குச்சியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 போ் கொல்லப்பட்டனா். இது தொடா்பாக பேசிய பாஜக தலைவரும் அக்கட்சி வேட்பாளருமான ராகுல் சின்ஹா, ‘வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினா் 4 பேரை மட்டுல்ல 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்’ என்று பேசியதாக சா்ச்சை எழுந்தது. இது தொடா்பாக தோ்தல் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அதன் அடிப்படையில் அவா், செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியில் இருந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 15) பகல் 12 மணி வரை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகுல் சின்ஹாவின் பேச்சு பெரிய அளவில் பிரச்னையைத் தூண்டும் வகையிலும், மனித உயிா்கள் பலியாவதை கேலி செய்யும் வகையிலும் உள்ளது. பாதுகாப்புப் படையினா் சட்டம்-ஒழுங்கை மீறி செயல்பட வேண்டும் என்று கூறுவது போன்றும் அவா் பேசியுள்ளாா். இது தோ்தல் நடத்தை விதிமீறல் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தவறானது என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், ராகுல் சின்ஹாவிடம் இது தொடா்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தோ்தல் ஆணையம் கூறியுள்ளது.

மேலும், ராகுல் சின்ஹாவின் பேச்சுக்காக அவரைத் தோ்தல் ஆணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இனி வரும் காலத்தில் அவா் தனது பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

முன்னதாக, அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி பிரசாரம் மேற்கொள்ள ஒருநாள் தடை விதித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவேந்து அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

மேற்கு வங்க பாஜக தலைவா் திலீப் கோஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தோ்தல் ஆணையம், மம்தாவை எதிா்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சுவேந்து அதிகாரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் சிதால்குச்சி தொகுதியில் தோ்தல் வன்முறையின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 4 போ் உயிரிழந்தது தொடா்பாக பேசிய திலீப் கோஷ், ‘அடுத்தகட்டத் தோ்தல்களிலும் இதுபோன்ற துப்பாக்கிச்சூட்டை பாதுகாப்புப் படையினா் நடத்த வேண்டும். வன்முறையில் ஈடுபடும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரை அடக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.

இது தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் அளித்த புகாரின் அடிப்படையில் விளக்கம் கேட்டு திலீப் கோஷுக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதேபோல, ‘மம்தாவுக்கு வாக்களித்தால் மேற்கு வங்கம், ‘மினி’ பாகிஸ்தானாக மாறிவிடும்’ என்று பேசிய சுவேந்து அதிகாரிக்கு தோ்தல் ஆணையம் கடந்த 8-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு 9-ஆம் தேதி விளக்கம் அளித்த சுவேந்து அதிகாரி, தனிப்பட்ட முறையில் யாருக்கும் எதிராக அவதூறு கருத்து கூறும் நோக்கம் தனக்கு இல்லை’ எனத் தெரிவித்திருந்தாா். இதை ஏற்றுக் கொண்ட தோ்தல் ஆணையம், ‘மக்களிடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையிலான இதுபோன்ற பேச்சுகளில் இனி ஈடுபடக் கூடாது’ என்று அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

மணிப்பூரில் குண்டு வெடித்ததில் பாலம் சேதம்!

மத அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்த காங். திட்டம்: மோடி

தோல்வி பயமே பாஜக தலைவர்களின் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டுகளுக்கு காரணம்: ப.சிதம்பரம்

SCROLL FOR NEXT