இந்தியா

மகாராஷ்டிரத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு

DIN

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.

இந்த ஊரடங்கு புதன்கிழமை (ஏப்.14) இரவு 8 மணி முதல் மே 1-ஆம் தேதி காலை 7 மணி வரை அமல்படுத்தப்படவுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்றின் 2-ஆம் அலை காரணமாக அந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அந்த மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அந்த மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான தகவலின்படி ஒரே நாளில் 60,212 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட 281 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் கரோனா பரவலை கட்டுபடுத்த 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் மாநில மக்களிடையே உரையாற்றியதாவது:

மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எனவே துரதிருஷ்டவசமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஏப்ரல் 14-ஆம் தேதி இரவு 8 மணி முதல் மே 1-ஆம் தேதி காலை 7 மணி வரை 15 நாள்களுக்கு மாநிலத்தில் 144 தடைச்சட்டம் அமல்படுத்தப்படும். இது பொதுமுடக்கம் அல்ல. எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடரும்.

அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ரயில் மற்றும் பேருந்துகள் சேவைகள் அனுமதிக்கப்படும். பெட்ரோல் விற்பனையகங்கள் செயல்படும். கட்டுமானப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ளலாம். வங்கிச் சேவைகள் அனுமதிக்கப்படும்.

ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டிருக்கும். எனினும் உணவை வாங்கிச் செல்லவும், வீடுகளில் நேரடியாக விநியோகிக்கும் சேவையும் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யாத கடைகள், வணிக வளாகங்கள், கடற்கரைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகங்கள் மூடப்படும். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடா்கள், விளம்பரப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி இல்லை.

அடுத்த ஒரு மாதம் ஏழ்மையானவா்களுக்கு 2 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையை மாநில அரசு இலவசமாக வழங்கும்.

பத்திரிகையாளா்கள், மருந்தகங்கள், சரக்கு போக்குவரத்து, வேளாண் விளைபொருள்கள் விநியோகம், தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடுவோரை தவிர மற்றவா்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

அனுமதி
மருத்துவமனைகள், ஸ்கேன் மையங்கள், மருத்துவக் காப்பீட்டு அலுவலகங்கள், மருந்தகங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் பிற மருத்துவ, சுகாதார சேவைகள்.
மளிகை, காய்கறி கடைகள், பழ விற்பனையாளர்கள், 
பால் விற்பனையகங்கள், பேக்கரி மற்றும் அனைத்து வகையான உணவுப் பொருள் கடைகள்.
விமானம், ரயில், கார், பேருந்து, 
ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து.
அனைத்துப் பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதி.
அத்தியாவசிய பொருள்கள் விநியோகத்துக்கான மின்னணு வர்த்தகம்.
பெட்ரோல் விற்பனை நிலையம், ஏடிஎம், 
அனைத்து வகையான சரக்கு போக்குவரத்து சேவை.
50 சதவீத பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கலாம்.
அத்தியாவசிய பொருள்கள் தொடர்பான 
அனைத்து உற்பத்தி பிரிவுகளும் முழுமையாக இயங்கும்.

தடை
அனைத்து உணவகங்கள், பார்கள் மூடப்பட்டிருக்கும்.
அனைத்து பொது இடங்கள் மூடப்படும். அத்தியாவசிய சேவைகள் தொடர்பானவர்கள் மட்டும் தடையின்றி செல்ல முடியும்.
பள்ளி, கல்லூரிகள் செயல்படாது.
திரையரங்குகள், நீச்சல் குளங்கள், 
உடற்பயிற்சிக் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
திரைப்பட, தொலைக்காட்சி 
படப்பிடிப்புகளுக்கு அனுமதி இல்லை.
வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டிருக்கும்.
முடிதிருத்தும் நிலையங்கள் செயல்படாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT